உலகம்

ஈரான் மீது சீற்றத்துடன் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - நிலவரமும் பின்னணியும் என்ன?

தெற்கு ஈரான் பள்ளியில் மாணவிகள் உள்பட 40 பேர் உயிரிழப்பு

அனலி

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து சீற்றத்துடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகள் தயாரிக்கும் திட்டத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்காவும், ஈரானும் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த கூட்டுத் தாக்குதலில் இறங்கியுள்ளன.

ஏற்கெனவே ஈரான் மீது இந்த இரு நாடுகளும் 12 நாட்கள் தாக்குதல் நடத்தின. அது முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில், மீண்டுமொரு தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த முறை இன்னும் ஆக்ரோஷமாக.

ஆனால், ஈரானும் சற்றும் சளைக்காமல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பிலும் தாக்குதலால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இருப்பினும், அண்மைத் தகவலின்படி தெற்கு ஈரானில் பெண்கள் பள்ளியில் ஏவுகணை விழுந்ததில் மாணவிகள் உள்பட 40 பேர் உயிரிழந்ததாக ஈரான் தேசிய ஊடகக் குறிப்பு தெரிவிக்கின்றது.

          

ஈரானில் இதுவரை...

இந்திய நேரப்படி இன்று காலை 6.27 மணிக்கு ஈரானின் ஃபர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது. அதில், தலைநகர் தெஹ்ரானில் பல இடங்களில் தொடர் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்தது. அடுத்தடுத்த மணி நேரங்களில் ஈரானில் ஆங்காங்கே தாக்குதல்களால் விண்ணை முட்டும் அளவுக்கு கிளம்பும் புகை கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

அந்த வேளையில் இஸ்ரேல் முதன்முறையாக அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது. ‘ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஈரான் மீதான தாக்குதலை உறுதி செய்து ஒரு வீடியோப் பதிவை வெளியிட்டார். அதில் அவர், “ஈரானின் புரட்சிகர இஸ்லாமியப் படையினருக்கும், ஆயுதப் படைகளுக்கும், காவல் துறைக்கும், நான் இன்றிரவு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். உங்கள் ஆயுதங்களைத் துறந்து சரணடையுங்கள்... உங்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இல்லாவிட்டால், உறுதியாக மரணத்தை எதிர்கொள்வீர்கள்” என எச்சரித்துள்ளார்.

மேலும், “இந்தத் தாக்குதல், ஈரான் தனது அணுசக்தி மையங்களில் மீள்கட்டமைப்பு செய்வதை தடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கான அச்சுறுத்தல்களை துடைத்தெறியும் தாக்குதல் இது. ஈரான் மீள் கட்டமைக்கும் அணு ஆயுதங்களை அழிப்பதே எங்களின் திட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்க ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

ஈரான் ராணுவம், காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், ஈரான் மக்களுக்கான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.

அதில் ட்ரம்ப், “சக்திவாய்ந்த ஈரானிய மக்களே, இன்றிரவு உங்களுக்கு நீங்கள் விரும்பிய சுதந்திரம் கைகளில் கிட்டும். அதுவரை பாதுகாப்பாக இருங்கள். வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள். வெளியே ஆபத்துள்ளது. குண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும். எல்லாம் முடியட்டும். உங்களுக்கான அரசை நீங்களே உருவாக்குங்கள். அது உங்களிடமே விடப்படும்” என்று கூறியுள்ளார்.

எங்கெல்லாம் தாக்குதல்?

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஈரானின் புரட்சிகர இஸ்லாமிக் படைகளின் தலைமையகம் அருகே பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஈரானின் ஜமோரி பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகம் அருகேயும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானின் வட பகுதியான செய்யது கண்டன் பகுதி, கெர்மான்ஷா, கோம், தப்ரீஸ், இஸ்ஃபஹான், இலாம் மற்றும் கரஜ் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் கமேனிக்குப் பின்...

மேற்கு ஆசிய நாடான ஈரானின் அரசியல் வரலாற்றை அயோதுல்லா அலி கமேனிக்கு முன் கமேனிக்கு பின் என்று பிரித்துக் கொள்ளலாம். கமேனி, 1939-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஜாவேத் கமேனி ஒரு மதகுரு.

1960 முதல் 70 வரை ஈரானில் இருந்த ஆட்சியை திரைமறைவில் இருந்து அமெரிக்கா இயக்கிக் கொண்டிருந்தது எனலாம். ஷா வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. ஈரான் மேற்கத்திய கலாச்சாரத் தன்மையில் மூழ்க ஆரம்பித்திருந்தது.

அப்போது அயோதுல்லா கமேனி, ஈரான் மேற்கத்திய கலாச்சார மயமாக்கலுக்கு உள்ளாவதற்கு எதிராக போராடும் குழுக்களுடன் இணைந்து போராடி வந்தார். ருஹொல்லா கொமேனியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். புரட்சியில் ஆட்சியாளர்களை ஸ்தம்பிக்க வைத்ததால், ஷா ஆட்சியின் ரகசிய போலீஸாரால் கமேனி கைதும் செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஷா குடும்பத்தினர், ஈரானில் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் தலையீட்டால் பொருளாதார ஏற்றம் வரும் என காத்திருந்தனர். ஆனால், ஈரான் எண்ணெய் வளம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர, அங்கு எந்த செழிப்பும் ஏற்படவில்லை. அப்போதுதான் ஈரான் மதகுருக்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள் இணைந்து ஒரு புரட்சியை நடத்தினர். அதன் விளைவாக 1979-ல் ஷா ஆட்சி அதிகாரம் தூக்கி வீசப்பட்டது.

ஈரான் ஓர் இஸ்லாமிய குடியரசு ஆனது. இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினரானார் கமேனி. முகமது அலி ரஜாயி ஈரான் அதிபரானார். ஆனால், ஒரு குண்டு வீச்சு நிகழ்வில் முகமது அலி கொல்லப்படவே, 1982-ல் ஈரான் அதிபரானார் கமேனி. 1989-ல் ஈரானின் உச்ச தலைவரானார். அன்று தொட்டு இன்று வரை அவர் தான் ஈரானின் உச்ச தலைவராக இருக்கிறார்.

இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் ஆட்சியில் கமேனிக்கு நாட்டின் அரசு, நீதித் துறை, ஊடகம் என அனைத்தின் மீதும் வானளாவிய அதிகாரம் உண்டு. இந்த ஏகபோக அதிகாரம்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்கின்றனர் தற்போது களத்தில் போராடும் மக்களும், இளைஞர்களும். ஈரான் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்.

என்னதான் வேண்டும் ட்ரம்ப்புக்கு?

ஈரானில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று ட்ரம்ப்பும் விரும்புகிறார். 73 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானில் இத்தகைய ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அது அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் உதவியோடு நிகழ்த்தப்பட்டது. ஈரான் பிரதமராக இருந்த முகமது மொசாடேக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அப்போது அமெரிக்க உள்நாட்டில் கிளிர்ச்சியை தூண்டிவிட்டு ஆட்சி மாற்றத்தை உண்டாக்கியது இப்போது ஆயுதங்களோடு அதை நிகழ்த்த முயற்சிக்கிறது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கணிக்கின்றன.

இந்தத் தாக்குதலால உயிரிழப்புகள் நிச்சயம் இருக்கும் என்று ஆரம்ப நிலையிலெயே டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக் கொண்டும் விட்டதால் இது ஒரு நாள் தாக்குதலாக இல்லாமல் தொடரக்கூடிய ராணுவ நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஈரான் பதிலடி...

தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே ஈரான் உடனடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவியது. வடக்கு இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டது.

  • அல் உதைத் விமானத் தளம் - கத்தார்

  • அல் சலேம் விமானத் தளம் - குவைத்

  • அல் - தஃப்ரா விமானத் தளம் - ஐக்கிய அரபு அமீரகம்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தலைமையகம், ரியாத், சவுதி அரேபியாவில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

முன்னதாக, ஈரான் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு கமிஷனின் தலைவர் இப்ரஹிம் அசிசி, “நாங்கள் உங்களை ஏற்கெனவே எச்சரித்தோம். இப்போது நீங்கள் தேர்வு செய்துள்ள பாதையின் முடிவு உங்கள் கைகளில் இல்லை” என்று கடுமையான கண்டனங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது இந்த காத்திரமான பதிவு கவனிக்கத்தக்கது.

ஈரான் தலைவர்கள் எங்கே?

அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகக் குறிவைக்கும் 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் கமேனி எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. தெஹ்ரானில் அவரது இல்லத்துக்குச் செல்லும் சாலைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. அதேபோல் அதிபர் மசூத் பெசெஸ்கியான் காயமடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக ஐஆர்என்ஏ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT