ஹார்மூஸ் நீரிணை
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு மாதம் கூட முடிவுறாத நிலையில், மீண்டும் அமெரிக்கா - ஈரான் மோதல் வெடித்துள்ளது சர்வதேச அளவில் பாதிப்புகளை கடத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ‘முறிய’ என்னதான் காரணம் என்று சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை முடிந்துவிட்டது.
ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுக்கிறார்கள்.
இனி, நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நான் நம்பவில்லை. அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநிலை சரியில்லாதவர்கள்” என்று தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவைக் கண்டன. ஐரோப்பிய பங்கு வர்த்தகத்திலும் இந்த அதிரடி அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்காசிய போர்ப் பதற்றம் ஓய்ந்ததின் பலனை முழுமையாக உலக நாடுகள் முழுமையாக உணர்வதற்கு முன்னரே மீண்டும் போர்ப் பதற்றம் தொற்றத் தொடங்கியிருக்கிறது.
மீண்டும் பதற்றத்துக்கு என்ன காரணம்?
ஈரான் - அமெரிக்கா இடையே ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
ஒப்பந்த அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை சமீபத்தில் கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஈரான் நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதுதான் அங்காராவில் ட்ரம்ப் ஆவேசமாகப் பேசவும், மீண்டும் தாக்குதல் வலுப்பெறவும் காரணம்.
ஈரானின் துருப்புச் சீட்டு
கிட்டத்தட்ட 5 மாதங்கள் நடந்த போரின்போது ஈரான் ஹார்மூஸ் நீரிணையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டது. தனது பலம் அணு ஆயுதங்களை தயாரிப்பதை விட ஹார்மூஸ் நீரிணை மீது செலுத்தக்கூடிய ஆதிக்கதாலேயே கூடும் என்பதை உணர்ந்தது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் இந்த குறுகிய நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் அந்த விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பு சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை தொடங்கி கண்டங்கள் தாண்டி பொருளாதரங்களை எப்படிப் பதம் பார்த்தது என்பதையும் ஈரான் உன்னிப்பாக கவனித்தது.
அதனாலேயே இப்போது ஹார்மூஸ் நீரிணையை ஒரு துருப்புச் சீட்டாக்கிக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தை அச்சுறுத்த, சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்த ஹார்மூஸ் நீரிணையை மூடினாலோ அல்லது அதில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ போதும் என்று முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறுகின்றனர் போர் விவகாரங்களை அலசி ஆராயும் நிபுணர்கள்.
மேலும், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டுவதற்கும் ஹார்மூஸ் முக்கியத்துவத்தை உணர்ந்ததே காரணம் என்று கூறுகின்றனர்.
என்ன சொல்கின்றன அமெரிக்காவும், ஈரானும்?
அமெரிக்காவின் மத்திய கமாண்ட் படை (CENTCOM), வியாழக்கிழமை அன்று ஈரானின் 90 ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்துள்ளது. ஹார்மூஸ் நீரிணையில் வணிக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல், அப்பாவி மாலுமிகளை ஈரான் இனியும் தாக்கக் கூடாது என்ற அக்கறையில் தான் ஈரானை தாக்குவதாகக் கூறுகிறது.
ஆனால் ஈரான் அரசியல் தலைவர்களோ, அமெரிக்கா ‘போர்க் குற்றம்’ செய்து கொண்டிருப்பதாக கண்டனத்தை பதிவு செய்கின்றனர். போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்காவே மீறுகிறது என்கின்றனர்.
ஈரான் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் முகமது கலிபாஃப் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மிரட்டுவதும், கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதும் இனியும் அத்தனை சுலபமாக நடந்துவிடாது. அப்படிச் செய்தால் அதற்கு ஒரு விலை உண்டு என்பதை இன்னும் அமெரிக்கா புரிந்துகொள்ளவே இல்லை. ‘தாக்கினால்; தாக்கப்படுவீர்கள்’ என்று இதை நான் எளிமையாகச் சொல்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் நில்லாது, “ஹார்மூஸ் நீரிணை திறப்பு ஈரானிய ஏற்பாடுகளால் மட்டுமே நடக்குமே தவிர, உங்களுடைய அச்சுறுத்தல்களால் அல்ல. அதனால் இலக்கின்றி தடுமாறாதீர்கள். அது உங்களை மூழ்கடித்துவிடும்” என்றும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு தரப்புமே பரஸ்பரம் ஒன்றின் மீது மற்றொன்று குற்றம்சாட்டுகின்றன.
தெற்கு லெபனான் மீதான தாக்குதல், ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த அமெரிக்கா தவறிவிட்டது. ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியதும் அமெரிக்கா தான் என்று ஈரான் கூறுகிறது.
ஹார்மூஸில் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை ஈரான் தடுக்கிறது என்று அமெரிக்கா கூறுகிறது.
“அமெரிக்க அதிபரின் பேச்சு என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு அல்ல, அது தோல்வியை ஒப்புக்கொண்ட வாக்குமூலம்,” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 5-ம் சர்ச்சையும்:
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5-வது பிரிவின் விளக்கத்தில் உள்ள கருத்து வேறுபாடே மிகப் பெரிய நிரந்தர போர் நிறுத்தத்தை கொண்டு வருவதில் முட்டுக்கட்டையாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சட்டப்பிரிவு 5, ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து, கடந்த 100 நாட்களாக தடைபட்ட வணிகப் போக்குவரத்து சுதந்திரமாக நடக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5-ம் சட்டப் பிரிவின்படி ஹார்மூஸ் மீதான நிர்வாகப் பொறுப்பு முழுவதும் தனக்கே உரியது என்கிறது ஈரான். ஹார்மூஸ் வழியாக பயணிக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்களுக்கு ஒரு புதிய பாதுகாப்பான பாதையை அமைப்பதற்கான ஓமன் - ஐ.நா.வின் முயற்சிகளை ஈரான் மிகக் கடுமையாக எதிர்க்கிறது.
இப்படி அந்த சட்டப் பிரிவின் மீது இரு தரப்பும் ஒவ்வொரு புரிதலை வெளிப்படுத்துகின்றன. இதனாலேயே ஜூன் இறுதியில் ஒரு சிறிய தாக்குதலை ஈரான் நடத்தியது. தான் அங்கீகரிக்காத வழித் தடத்தில் கப்பல் செல்வதாக தாகியது. ஜூன் 26-ல் அதற்கு அமெரிக்கா பதிலடியும் கொடுத்தது. ஈரான் பதிலுக்கு குவைத், பஹ்ரைனிலும் தாக்குதல் நடத்தியது. அதன் நீட்சியாக இப்போது ஈரான் - அமெரிக்கா போர் மீண்டும் பழைய உக்கிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ட்ரம்ப் வியூகம் என்ன?
ஹார்மூஸ் மீது ஈரான் பிடியை இறுக்க நினைக்க, ஈரானின் எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பான கார்க் தீவுகளின் மீது அச்சுறுத்தல்களை அதிகரிக்க ட்ரம்ப் திட்டமிடுகிறார் என்கின்றனர் போர் உத்தி ஆய்வாளர்கள்.
அதாவது, ஈரான் தங்கு தடையின்றி எண்ணெய் உற்பத்தி செய்யட்டும். அதை டேங்கர்களில் நிரப்பட்டும். ஆனால் அதை வர்த்தகம் செய்ய முடியாமல் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் திட்டம் என்கின்றனர். ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி அதற்கு பொருளாதார ரீதியாக கடும் துன்பத்தைத் தர அவர் திட்டமிடுகிறார் என்றும் கூறுகின்றனர்.
ஏற்கெனவே, தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர்களில் பகிரங்கமாக எண்ணெய் விற்பனை செய்யும் உரிமத்தை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் விளைவாக ஈரான் இனிமேல் உலக சந்தையில் வெளிப்படையாக எண்ணெய் விற்பனையை டாலர்களில் சம்பாதிக்க முடியாது. இதனால் ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய நெருக்கடி ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்க் தீவுகளின் மீது அச்சுறுத்தலையும் ஈரான் இறுக்கக் காத்திருக்கிறது.
இப்படி அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் ஒரு செக் மேட் காயினை கையில் வைத்திருப்பதால் போர் ஒப்பந்தம் முற்றிலும் முறிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. இரு நாடுகளுமே ஒரு சுற்று தாக்குதலை நடத்திவிட்டு மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கி திரும்பும் என்று கணிக்கப்படுகிறது.
ஆனால், இதில் ஈரானின் இன்னொரு துருப்புச் சீட்டு என்பது வளைகுடா நாடுகளின் அமைதியைக் குலைப்பது ஆகும். பஹ்ரைன், குவைத் என்று வேறெங்கெல்லாம் அமெரிக்கா ராணுவ தளங்கள் உள்ளதோ அங்கெல்லாம் தாக்குதலை நடத்தி போர் பரப்பளவை விஸ்தரிப்பது. இப்படி போரை செலவின ரீதியாக அமெரிக்காவுக்கு நெருக்கடியாக்குவது, பிராந்தியம் தாண்டிய பிரச்சினையை இழுத்துவிடுவது, போரின் போக்கை கணிக்க முடியாமல் வைத்திருப்பது என்று ஈரான் உலக அமைதியுடன் விளையாடுகிறது என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.