இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
“இனி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; நான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போகிறேன்,” என்று டொனால்டு ட்ரம்ப் “ஐ டோண்ட் கேர்” மனநிலைக்குள் சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போர் இனி என்னவாகும், ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கை என்ன மாதிரியான தாக்கத்தை அமெரிக்காவிலும், உலகளவிலும் ஏற்படுத்தக்கூடும், இந்தப் போரை நீட்டிப்பதிலும், நிறுத்துவதிலும் ட்ரம்ப் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பன குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.
ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால்..?
அமெரிக்க ராணுவத்தின் சென்ட்ரல் கமான்ட் (US CENTCOM), ஹார்முஸ் ஜலசந்தி மூடும் என்று ட்ரம்ப் அறிவித்துவிட்டாலும், அது எப்படி சாத்தியம், இந்த சென்ட்காம் என்பது என்ன போன்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.
முதலில் சென்ட்காம் பற்றி அறிவோம். சென்ட்ரல் கமாண்ட் என்பதன் சுருக்கமே சென்ட்காம். 1983-ல் நிறுவப்பட்ட இது, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகள் உட்பட 21 நாடுகளில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். இப்பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மோதல்களைத் தடுத்தல் மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்தல் போன்ற பணிகளைச் சென்ட்காம் செய்கிறது. இதன் தலைமையகம் ஃப்ளோரிடாவில் உள்ளது.
ட்ரம்ப் விடுத்த ஹார்முஸ் மூடல் குறித்து இந்த அமைப்பு, “ஈரான் நேரப்படி மாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணி) சென்ட்காம் ஹார்முஸ் முடக்கத்தை அமல்படுத்தும். அப்போது தொடங்கி, பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா வழியாக ஈரான் துறைமுகங்களுக்குள் நுழைய முற்படும் அனைத்து கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும். ஆனால், இவையல்லாது பிற துறைமுகங்கள் இடையே பயணிக்கும் கப்பலகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்படும். இதனை அமெரிக்க போர்க் கப்பல்கள் உறுதி செய்யும். ஈரான், ஹார்முஸுக்கு அடியில் புதைத்து வைத்திருப்பதாகச் சொல்லும் கண்ணிவெடிகளையும் சமாளிக்கும்” என்று விளக்கியுள்ளது.
இதனிடையே, ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டால், அடுத்த நொடியே ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்’ என்று இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஹார்முஸில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பின்னர் அன்றாடம் 40 வர்த்தக கப்பல்கள் பயணித்து வந்த நிலையில் அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மேற்காசிய பதற்றத்துக்கு முன்னால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாள் ஒன்றுக்கு 100 முதல் 135 கப்பல்கள் பயணித்தன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20% ஹார்முஸ் வழித்தடத்தையே சார்ந்துள்ளது. இப்போது இதை முடக்கினால், ஏற்கனவே சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தள்ளாடும் சூழலில் அது மேலும் உயரக் கூடும். அதன் நீட்சியாக பணவீக்கமும் அதிகரிக்கும்.
ஹார்முஸை சென்ட்காம் முடக்குவது சர்வதேச அளவில் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதேபோல் இந்த போர் காரணமாக உள்நாட்டில் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கங்களையும் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்படும் என்று கூறுகின்றனர்.
ஈரான் மீது அழுத்தம் அதிகரிக்கும்:
அதேபோல், ட்ரம்ப்பின் அறிவிப்பு ஈரான் மீதான கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
அமெரிக்கா ஹார்முஸை முடக்கினால், பாரசீக - ஓமன் வளைகுடாக்களில் எந்தவொரு துறைமுகமும் பாதுகாப்பானதாக இருக்காது என்று ஈரான் எச்சரித்திருந்தாலும், ஈரான் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்படுகிறது.
போர் தொடங்கிய பின்னரும் கூட ஹார்முஸ் மீதுள்ள ஆதிக்கத்தால், பல மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றுமதி செய்துள்ள ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முற்றுகையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது பல ஆண்டுகளாகவே பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள நிலையில், இப்போது ஹார்முஸை முடக்கினால் ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் பெரும்பகுதியை, ‘மறைமுக வழித்தடங்கள்’ மூலம் கொண்டு செல்ல நேரிடும். இதனால் ஹார்முஸ் மீதான ஈரானின் ஆதிக்கம் குறையும் என்று அமெரிக்கா கணக்கிடுகிறது.
ஈரானுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் இது மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீதான் போர் தொடங்கிய நாளில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 70 டாலருக்கு விற்பனையானது. இப்போது ஒரு பீப்பாய் 102.29 டாலருக்கு விற்பனையாகிறது. தற்காலிக போர் நிறுத்தம் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அமெரிக்காவின் ஹார்முஸ் முடக்கம் அமலானால் அடுத்தது என்னவென்ற பீதி உலகம் முழுவதும் பீடித்திருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச சமூகத்தின் நலன் கருதி ஹார்முஸ் ஜலசந்தியில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு சீனா வேண்டியுள்ளது.
தெற்காசிய கூட்டமைப்பான ஆசியான் அமைப்பு - போர் நிறுத்தத்தை முழுமையாக தீவிரமாக கடைப்பிடித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், “பிரான்ஸும், பிரிட்டனும் இணைந்து ஹார்முஸில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளது.
இது முதன்முறை அல்ல...
அமெரிக்கா இதுபோல் அந்நிய நாட்டின் கப்பல் போக்குவரத்தை முடக்குவது முதன்முறை அல்ல. கியூபாவிலும், வெனிசுலாவிலும் கூட அண்மையில் நடத்தியது.
இப்போது ஈரானிலும் அதை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது. முடக்கத்தை எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதைவிட, அஹன் தாக்கங்கள் என்னவென்பதே கவனத்தை ஈர்க்கிறது.
வளைகுடா நாடுகள் சர்வதேச எரிபொருள் விநியோகப் புள்ளியாக உள்ளது. அதுதவிர ஹைட்ரோகார்பன்கள் இருப்பிடமாகவும் இருக்கின்றது. இந்தப் போரும், ஹார்முஸ் முடக்கம் போன்ற நடவடிக்கைகளும் இன்னும் சில வாரங்கள் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தாண்டி பல படிநிலைகளில் பல்வேறு மோசமான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கெனவே இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாட்டால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது மறைமுகமாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஹார்முஸ் முடக்கம் எச்சரிக்கையால், இன்று பங்குச் சந்தைகள் சரிந்ததோடு, ரூபாய் மதிப்பும் குறைந்தது. இந்தியாவைவிட அதிகமாகவே சீனாவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஓனிக்ஸ் கேபிடல் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் மான்டேபெக் கூறும்போது, “அமெரிக்கா தனது தடையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், சந்தையின் நிலவரப்படி எண்ணெய் விலை பீப்பாய்க்கு 140 முதல் 150 டாலர் வரை உயரக் கூடும். ஈரானை ஒடுக்குவதில் காட்டும் தீவிரத்தால், உலக நாடுகளுக்கு தாங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை அமெரிக்கா உணரவில்லை. இதன் பாதிப்பு ஆசிய நாடுகளிலும், தென் பசிபிக் பிராந்தியத்திலும், எண்ணெயைச் சார்ந்துள்ள அனைத்து நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
இத்தகைய சூழலில்தான் உலகம் ட்ரம்ப்பின் அடுத்த நகர்வை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
அதேவேளையில், ‘சிறிய ரக ஏவுகணைகளை ஈரானுக்கு வழங்க சீனா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உறுதி செய்யப்பட்டால் சீன பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். சீனாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது. சீன கப்பல்கள் அமெரிக்கா அல்லது வெனிசுலாவுக்கு வந்து கச்சா எண்ணெய் நிரப்பிச் செல்லலாம்’ என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.