நவம்பர் 3-ஐ அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்று நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல் 2026 (US Midterms 2026), அந்நாட்டின் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையிலான வழக்கமான அரசியல் போட்டி மட்டும் இல்லை. மாறாக, அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரம்பற்ற அதிகாரத்துக்கும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்டுப்பாடுகளுக்கும் இடையே நடைபெறும் ஒரு வாழ்வா - சாவா போராட்டமும்தான்.
ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றினால், அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
இடைக்காலத் தேர்தல்:
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
> பிரதிநிதிகள் சபை (மக்களவை): மொத்தமுள்ள 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
> செனட் சபை (மாநிலங்களவை): 100 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 இடங்களுக்குத் தேர்தல் நடக்கிறது.
> ஆளுநர் பதவிகள்: அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 36 மாகாணங்களின் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடக்க இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம்:
435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில், அதிபர் ட்ரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சி மிகக் குறைந்த பெரும்பான்மையிலேயே உள்ளது. இந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இந்த அவையைக் கைப்பற்ற 80 சதவீதத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகத் தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
செனட் சபையைத் தற்போது குடியரசுக் கட்சி 53-47 என்ற கணக்கில் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், அலாஸ்கா, ஐயோவா, கன்சாஸ் போன்ற முக்கிய மாகாணங்களில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக, செனட் அவையிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற 60 சதவீதம் வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் கூறுகின்றன.
அமெரிக்க அரசியல் உண்டாகும் மாற்றம்?
இந்த 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டையும் கைப்பற்றினால், வாஷிங்டனின் அதிகார மையம் தலைகீழாக மாறும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் தாராளமயமாக்கல் கொள்கைகள், வரித்தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடற்ற வர்த்தகச் சூழலை அனுபவித்து வந்த தனியார் ஈக்விட்டி (Private Equity) நிறுவனங்களும் பெரு வங்கிகளும் இப்போது கவலையில் ஆழ்ந்துள்ளன. கார்ப்பரேட்களின் பண பலம், வரித் தளர்வு முறைகேடுகள் மற்றும் கட்டுப்பாடற்ற நிதி முதலீடுகள் மீது விசாரணைகள் நடத்தப்படலாம்.
செயற்கை நுண்ணறிவு துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், கட்டுப்பாடற்ற சுதந்திரம், ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட வேலையிழப்பு, காளான்கள் போல் பெருகிவரும் டேட்டா சென்டர்களால் (Data Centers) ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் மின்தட்டுப்பாடு குறித்து ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி விசாரணை நடத்தக்கூடும்.
சிலிக்கான் வேலிக்கும் சிக்கல்
குறிப்பாக சிலிக்கான் வேலியின் பெருநிறுவனங்களான மெட்டா (Meta), கூகுள் (Google), ஓபன் ஏஐ (OpenAI), அமேசான் (Amazon), ஆப்பிள் (Apple), டெஸ்லா (Tesla) மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) ஆகியவற்றின் தலைவர்கள், அதிபர் ட்ரம்ப் உடன் நெருக்கமாக இருந்து பல்வேறு சலுகைகளைப் பெற்றது குறித்த விசாரணைக்குள் கொண்டுவரப்படலாம்.
வாஷிங்டன் போஸ்ட் நாளேடு கடந்த அக்டோபர் 26 அன்று இது குறித்து வெளியிட்ட செய்தியில், ‘ட்ரம்ப்பின் நிர்வாகத்துடனான உறவுகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக பலான்டீர் (Palantir), ஓபன் ஏஐ (OpenAI), மெட்டா (Meta) போன்ற நிறுவனங்களும், ட்ரம்ப்பின் குடும்பத்தினருடன் தொடர்புடைய பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களின் கடும் விமர்சனத்துக்கும் கண்காணிப்புக்கும் உள்ளாகியுள்ளன.
அரசு ஒப்பந்தங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன, பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அரசியல் லாபங்கள் குறித்த விசாரணைகள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் தீவிரமடையலாம்’ எனத் தெரிவித்திருந்தது.
ஏஐ கட்டுப்பாடுகள்
ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுடனான போட்டியை மனதில் கொண்டு செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்குக் குறைந்த கட்டுப்பாடுகளையே விதித்துள்ளது. ஆனால், ஏஐ காரணமாக ஏற்படும் வேலையிழப்பு, தேர்தல்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சமூகப் பாதிப்புகள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் கவலைப்படுகின்றனர்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஏஐ மாடல்களை எவ்வாறு சோதிக்கின்றன மற்றும் பயன்படுத்துகின்றன என்ற விவரங்களை ஜனநாயகக் கட்சியினர் கேள்விக்கு உள்ளாக்குவர்.
டேட்டா சென்டர்களால் அதிகரிக்கும் மின் தேவை, சுற்றுச்சூழல் மாசு மற்றும் நீர் தட்டுப்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் குறித்தும் ஜனநாயகக் கட்சியினர் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
கவலையில் கார்ப்பரேட்கள், வால் ஸ்டிரீட்
ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினால், ட்ரம்ப் கொண்டுவர நினைக்கும் புதிய வரிக்குறைப்புச் சட்டங்கள் அல்லது கார்ப்பரேட் ஆதரவு மசோதாக்கள் முடக்கப்படும்.
தனியார் ஈக்விட்டி மற்றும் வால் ஸ்டிரீட் வங்கிகள் வரிச் சலுகைகளைப் பயன்படுத்திய விதம் குறித்தும், ட்ரம்ப் நிர்வாகத்தால் பயனடைந்த கார்ப்பரேட்டுகள் குறித்தும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சம்மன் அனுப்பி விசாரிக்கலாம்.
தேர்தலுக்காகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்கியதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளையும் வெளிப்படைத்தன்மைச் சட்டங்களையும் முன்வைக்க வாய்ப்புள்ளது.
ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் சாதகங்கள்:
ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரு அவைகளையும் கைப்பற்றினாலும், அதிபர் ட்ரம்ப் தனது ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய முடியும். இருப்பினும், சில முக்கிய மாற்றங்களை ஜனநாயகக் கட்சியினரால் ஏற்படுத்த முடியும். அவை:
விசாரணை அதிகாரம்: சட்டங்களை நிறைவேற்ற முடியாவிட்டாலும், நாடாளுமன்றக் குழுக்கள் மூலமாக நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பி, அவர்களின் ரகசிய ஆவணங்களை வெளிப்படுத்த முடியும்.
நிதி ஒதுக்கீடு - நியமனக் கட்டுப்பாடு:
ட்ரம்ப் நிர்வாகத்தின் பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை முடக்க முடியும். செனட் சபை ஜனநாயகக் கட்சி வசம் சென்றால், ட்ரம்ப் பரிந்துரைக்கும் நீதிபதிகள், ஃபெடரல் ரிசர்வ் (Fed) உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் நியமனங்களை நிராகரிக்க முடியும்.
அதிபர் ட்ரம்ப் அடுத்து?
அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலம் பெரும் சவால்கள் நிறைந்ததாக மாறிவிடும். நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவையும் ஜனநாயகக் கட்சியினர் எளிதில் நிறைவேற்ற விடமாட்டார்கள்.
ட்ரம்ப்பின் நிர்வாக முடிவுகள், வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் கார்ப்பரேட் தொடர்புகள் குறித்து பல வழிகளில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர் மீது கண்டனத் தீர்மானமும் (Impeachment) கொண்டுவரப்படலாம்.
நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லாமல் போனால், ட்ரம்ப்பால் புதிய சட்டங்களை இயற்ற முடியாது. அவர் நிர்வாக ஆணைகள் (Executive Orders) மூலம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.