தாடிங் குடியிருப்புப் பகுதி
காத்மாண்டு: திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு பல்வேறு புதிய சவால்கள் எழுந்துள்ளன. பொருளாதார நெருக்கடி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கான நிவாரணப் பணிகள் என பல்வேறு பணிகளை நேபாள அரசு எதிர்கொண்டு வருகிறது.
பொருளாதார நெருக்கடி:
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நேபாளத்திற்கு 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. இழப்பு மற்றும் சேதங்கள் குறித்த மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.
தப்பித்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் தற்போது மருந்து மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வந்த குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிர் பிழைத்த வயதானவர்கள் மற்றும் நோயாளிகள், தாங்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
திரிசூலி பஜாரில் வசித்து வரும் ரகுபீர் கூறுகையில், “எனது அம்மா ரேகா தேவி நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இவற்றுக்கு தொடர்ந்து மருந்துகள் தேவைப்படுகின்றன. தீடீர் வெள்ளம் காரணமாக வீட்டில் இருந்து மருந்துகளை நாங்கள் எடுக்கவில்லை.
வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தற்போது திரிசூல் மருத்துவமனைக்கு அருகில் உள்ள முகாமில் தங்கி உள்ளோம். மருந்து மாத்திரைகளை பெறுவதில் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம். மூன்ற நாட்களாக எனது அம்மா மருந்து எடுத்துக்கொள்ளாமல் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.
திரிசூலி மருத்துவமனையிலும் மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஏராளமான பொதுமக்கள் மருந்து மாத்திரை கிடைக்காமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
திரிசூல் மருத்துவமனையின் மருந்தாளர் மகேஸ்வர் யாதவ் கூறுகையில், “உயர் ரத்த அழுத்தத்துக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. இணைய வசதி இல்லாததால் காப்பீட்டுத் திட்டமும் செயல்படவில்லை. மருந்துகளும் தீர்ந்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் வெளிநாட்டு குழுக்களை ஈடுபடுத்த அனுமதி மறுத்த தனது முடிவை சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தத்தால் நேபாள அரசு மாற்றியது. இதனையடுத்து, உடனடியாக மீட்பு குழுவை அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை:
நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கு பகுதியில் நீர்மின் நிலையப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சுரங்கங்கள் மற்றும் நிலத்தடி நீர்மின் நிலையங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை நேபாள மீட்புக் குழுவினர் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இந்திய, சீன மீட்புக் குழுவினரும் இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேபாளத்தின் ரசுவா பகுதியில் உள்ள ஒரு நீர்மின் நிலைய பகுதியில் இருந்து 4 இந்தியர்கள் இன்று மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்பதில் உதவ சிறப்பு தொழில்நுட்பக் குழு ஒன்று நேற்று நேபாளம் சென்றது. இன்று அவர்கள் தங்கள் பணியை தொடங்கி உள்ளனர். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், உபகரணங்களுடன் கூடிய சிறப்பு சுரங்கப்பாதை மீட்புக் குழு ஒன்று இன்று நேபாளத்துக்கு புறப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சுரங்கப்பாதை மீட்புப் பணிகளுக்கு உதவ திபெத் பகுதியில் இருந்து 5 சுரங்கப்பாதை நிபுணர்களை சீனா நேபாளத்துக்கு அனுப்பியுள்ளது. இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, நீர்மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்காக நேபாள அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ஹெலிகாப்டர்கள் மூலம் சுரங்கப்பாதை நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
675 பேர் உயிரிழப்பு:
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 4-வது நாளாக தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 163 வெளிநாட்டினர் உட்பட சுமார் 3,000 பேர் நேபாள மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெளிநாட்டினரில் இந்தியா - 113, சீனா - 26, தென் கொரியா - 15, ஜெர்மனி - 4, இத்தாலி - 2, அமெரிக்கா 2, ஓமன் - 1 என்பது தெரியவந்துள்ளது.
88 இந்தியர்கள் மீட்பு:
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கிய 88 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேபாளத்தின் ரசுவா பகுதியில் உள்ள ஒரு நீர்மின் நிலைய பகுதியில் இருந்து 4 இந்தியர்கள் இன்று மீட்கப்பட்டனர். இதன்மூலம் இதுவரை 88 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 287 இந்தியர்களைக் காணவில்லை. இந்திய வம்சாவளியினரில் 128 பேரை காணவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக இந்தியாவில் இருந்து தடயவியல் நிபுணர் குழுக்கள் - ஆறு குழுக்கள் - நேபாளம் சென்றுள்ளன. இதனிடையே, சீனாவில் இருந்து 120 இந்தியர்கள் நேபாளம் சென்றுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.