உலகம்

அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி - ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

மோகன் கணபதி

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா அதே அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்தது. ஹெலிகாப்டர் விழுந்த இரண்டு மணி நேரத்துக்குள், அமெரிக்க ஐந்தாவது கடற்படையின் கீழ் இயங்கும் டாஸ்க் ஃபோர்ஸ் 59 பிரிவுக்குச் சொந்தமான கடற்பரப்பு ட்ரோன் மூலம் இரு விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு, மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தாக்குதலை அமெரிக்கா சாதாரணமாகக் கடந்து செல்லாது. இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா தகுந்த முறையில் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்படை்டதைத் தொடர்ந்து, அதே அளவிலான தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாலை 5 மணிக்கு ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தற்காப்பு தாக்குதல்களை தொடங்கின. அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக முப்படைகளின் தலைமைத் தளபதி (அமெரிக்க அதிபர்) உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான நடவடிக்கையே இது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, எந்த ஒரு தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போர்க்களத்தில் தோல்விகளைச் சந்தித்த போதிலும் அமெரிக்கா ஈரானின் உறுதியை சோதிக்கத் துணிந்துள்ளது. எங்கள் வலிமைமிக்க ஆயுதப் படைகள் எந்த ஒரு தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும். பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பிராந்தியத்தைவிட்டு வெளியேறுங்கள். பாரசீக வளைகுடாவின் வரலாறு, அத்துமீறி நுழைந்த அந்நியர்களின் மோசமான முடிவுகள் குறித்த பல அத்தியாயங்களைக் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த பதில் தாக்குதலை அடுத்து தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT