புளோரிடா: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. இதன்மூலம் (ஐபிஓ), அந்நிறுவனத்தில் முன்பு வெல்டராக பணியாற்றியவரின் பங்கு மதிப்பு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில், ஜுவான் ஹெர்னாண்டஸ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டில் வெல்டராக பணியில் சேர்ந்தார். பின்பு ராக்கெட் ஏவுதள உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் உதவியாளராக பணியாற்றினார். பின்பு மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றார்.
அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிறுவன பங்குகளை வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தது. அதை அப்போது ஜுவான் ஹெர்னாண்டஸ் பெரிய விஷயமாக கருதவில்லை. ஏனென்றால், அவர் முன்பு பணியாற்றிய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இது போல் பங்குகள் வழங்குவது வழக்கம் இல்லை.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஹெர்னாண்டஸ், சுமார் 6,500 ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளை வைத்திருந்தார். ஜுவான் ஹெர்னாண்டஸ் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி புளூ ஆரிஜின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 7.13 லட்சம் கோடி பங்குகளை நாஸ்டாக் பங்குச் சந்தையில்(ஐபிஓ) பட்டியலிட்டது. முதல் நாளில் ஒரு பங்கு விலை 160.95 டாலராக உயர்ந்தது. இதன் மூலம் ஜுவான் ஹெர்னாண்டஸ் பங்குகளின் மொத்த மதிப்பு 1 மில்லியன் டாலருக்கு (ரூ.9.95 கோடி) உயர்ந்துள்ளதால் அவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.