டெஹ்ரான்: ஏவுகணைகளை வீசி பள்ளிக் குழந்தைகள் 168 பேரைக் கொன்ற அமெரிக்க கடற்படை அதிகாரிகளை சும்மா விடமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
அதே நாளில், ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்கப் பள்ளி மீது தோமாக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 168 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள்தான் காரணம் என்றும் அவர்களை சும்மாவிட மாட்டோம் என்றும் ஈரான் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் நவம்பர் 14-ம் தேதி சமூக ஊடகங்களில் அந்த 2 அமெரிக்க அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அத்துடன், “நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம்” என்று நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்எஸ் ஸ்ப்ரூவன்ஸ் போர்க்கப்பலின் தளபதியான லீ ஆர் டேட் மற்றும் அந்தப் போர்க்கப்பலின் நிர்வாக அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் ஜெஃப்ரி இ யார்க் ஆகிய இருவரைத்தான் ஈரான் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. ஈரானிய படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் உட்பட 357 நாள் பணிகளை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் சான் டியாகோ துறைமுகத்துக்கு யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ் கப்பல் திரும்பிய நிலையில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.