தெஹ்ரான்: உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மூன்று வாரங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி, பாதுகாப்புப் படை செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானும், வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான பதிலடி தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் ஆயுதங்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி வசதிகள் எவ்வளவு சேதமடைந்துள்ளன என்பது குறித்தும், தற்போது யார் ஈரான் அரசின் உச்ச பொறுப்பில் உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் ஈரானிடம் இன்னும் எவ்வளவு ஆயுதங்கள், ஆற்றல் உள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை. எனவே, இந்தப் போர் எப்போது முடிவடையும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தச் சூழலில்தான் உலகெங்கிலும் உள்ள பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் இனி ஈரானின் எதிரிகளுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாட்டின் உயர்மட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி எச்சரித்துள்ளார். எனவே, மத்திய கிழக்குக்கு அப்பாலும் ஈரான் தனது தாக்குதல்களை இனி தீவிரப்படுத்தும் என்று கவலை எழுந்துள்ளது.
இதனிடயே,, “ஈரானின் கடற்படை மூழ்கடிக்கப்பட்டுவிட்டதுடன், அதன் விமானப் படையும் சிதைந்துவிட்டது. அத்துடன் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறனும் முடக்கப்பட்டுவிட்டது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இதனை மறுத்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நயீனி, “இந்தப் போர்ச் சூழல்களிலும் நாங்கள் ஏவுகணைகளை தொடர்ந்து உற்பத்தி செய்கிறோம், இது ஆச்சரியமானது. மேலும், அவற்றைச் சேமித்து வைப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் ஈரானுக்கு இல்லை. எதிரி முற்றிலுமாகச் சோர்வடையும் வரை போர் தொடரும்" என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, ஜெனரல் நயீனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.