ஷென்சென்: வல்லரசு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உலகம் சீர்குலைந்துவிடும் என்று எச்சரித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக அமைதியைக் காக்க மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று சீனாவின் ஷென்சென் நகரில் முத்தரப்பு உச்சி மாநாட்டில் சந்தித்தனர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் இடையே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: பெரிய நாடுகளுக்கிடையே நல்லுறவு என்பது விருப்பத்தேர்வு அல்ல, அது கட்டாயம். பெரிய நாடுகள் இணக்கமாக இருந்தால் உலகம் அமைதியாக இருக்கும். பெரிய வல்லரசுகளுக்குச் சிறப்புப் பொறுப்பு உண்டு.
உலகச் சவால்களை எதிர்கொள்ளவும், உலக அமைதியையும் நிலைத்தன்மையையும் காக்கவும், மனித முன்னேற்றத்துக்குப் பங்களிக்கவும் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை ஒத்துழைப்பில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவரின் இறையாண்மை, எல்லைப் பாதுகாப்பு, முக்கிய நலன்களை மற்றவர் மதிக்க வேண்டும். முக்கிய உணர்வுபூர்வ விவகாரங்களில் ஒருவரின் `எல்லைக் கோட்டை' மற்றவர் மீறக் கூடாது. பனிப்போர் மனப்பான்மையைக் கைவிட வேண்டும். பொருளாதாரத் தொடர்புகளைத் துண்டிக்கும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.
மூன்று நாடுகளுக்கிடையே தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும். நெருக்கடிக் காலத் தகவல் தொடர்பு அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். அணு ஆயுதப் போரில் யாரும் வெல்ல முடியாது. அது நடக்கவே கூடாது. அணு ஆயுதங்களுக்கு முழுமையாகத் தடை விதித்து, அவற்றை அழித்து, அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும். இவ்வாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார். மாநாட்டின் நிறைவாக, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய 3 நாடுகளும் இணைந்து கூட்டு `அமைதிப் பிரகடனத்தை' வெளியிட்டன.