உலகம்

“ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” - வங்கதேச அமைச்சர்

வெற்றி மயிலோன்

டாக்கா: “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தண்டனை பெற்ற குற்றவாளி. அவரை எங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று வங்கதேச சட்ட அமைச்சர் முகமது அசதுஸ்ஸமான் தெரிவித்தார்.

டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அசதுஸ்ஸமான், “என்னைப் பொறுத்தவரை, ஷேக் ஹசீனா ஒரு குற்றவாளி. எங்கள் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. இதுவே அவரைப் பற்றிய எங்களின் பார்வையாகும்.

ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து மீண்டும் அழைத்து வர அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

இந்தியாவுடனான நாடு கடத்தல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. உணர்ச்சிகளுக்கு இடமின்றி, சட்டப்படி இந்த விவகாரம் கையாளப்படும். ஒப்பந்தத்தின்படியும், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியும் அவரைத் திருப்பி அனுப்பக் கோரியுள்ளோம். ஷேக் ஹசீனாவை இந்தியா எங்களிடம் ஒப்படைத்தால், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய உரிய நடைமுறைகளின்படி நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் விடுத்த கோரிக்கையைப் பெற்றுக்கொண்டதை இந்தியா ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அவரை ஒப்படைப்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்தக் கோரிக்கைகள் தங்களின் வழக்கமான நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT