கீவ்: ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், டெலிகிராம் சமூக வலைதளத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் எரிபொருள் நெட்வொர்க்கை சிதைக்க உக்ரைன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவின் நிழலாக செயல்பட்டு வந்த 2 எண்ணெய் கப்பல்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்தோம்.
அந்தக் கப்பல்கள்தான் ரஷ்ய கச்சா எண்ணெய்யை கொண்டு சென்று வந்தன. இப்போது அந்த கப்பல்கள் இல்லை. அந்த 2 கப்பல்களையும் ரஷ்யாவின் நோவோராசியிக் துறைமுகத்தின் நுழைவு வாயில் பகுதியில் தாக்கி அழிக்கப்பட்டது. தரை, வான், கடல் வழியாக தொலைதூர இலக்கை தாக்கும் உக்ரைனின் ராணுவ நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உயிரிழப்பு எதுவும் இல்லை: முன்னதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் லெனின்கிரேன் உட்பட 15 பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுப்பிய உக்ரைனின் 334 ட்ரோன்களை இடைமறித்து அழித்தோம். இதில் உயிரிழப்பு எதுவும் ரஷ்ய தரப்பில் இல்லை” என்று கூறியிருந்தார்.