உலகம்

“விமானத்தை மோதி அழிக்க விரும்பினேன்” - ஃப்ளைதுபாய் துணை விமானி வாக்குமூலம்

டெக்ஸ்டர்

துபாய்: ஃப்ளைதுபாய் விமானத்தின் இந்தியக் கேப்டன் சுமித் மச்சாரைத் தாக்கி, நடுவானில் விமானத்தைக் கீழே மோத முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி தான் சாகப் பயப்படவில்லை என்றும், 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தை மோதி அழிப்பதே தனது நோக்கம் என்றும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரை இறக்கப்பட்ட பின்னர் முதற்கட்ட விசாரணைக்குப் பின், ஹம்மாமி தற்போது ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரக தலைமை வழக்கறிஞர், இந்த சம்பவத்தில் வெளிநாட்டு அமைப்புகளுக்குப் பங்கு உள்ளதா என்பது குறித்தும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஓமன் தந்தைக்கும் சிரிய தாய்க்கும் பிறந்த ஹம்மாமி, சிரிய உள்நாட்டுப் போரின் போது அங்குச் சென்று தங்கியிருந்தபோது தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவரது சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பெண்களுக்கு எதிரான கருத்துகள் மற்றும் தீவிரவாத சிந்தனைகள் கொண்ட பல்வேறு பதிவுகளை அவர் பகிர்ந்திருந்தது தெரியவந்துள்ளது.

முன்னதாக ஓமன் ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, தீவிரவாத இணையதளங்களைப் பார்வையிட்டதற்காக ஹம்மாமி விமானம் இயக்கத் தடை விதிக்கப்பட்டு, தீவிரவாத ஒழிப்பு பயிற்சிக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். இருப்பினும், நடப்பு 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஃப்ளைதுபாய் நிறுவனம் இவரைப் பணியில் சேர்த்துள்ளது.

ஓமன் நாட்டின் பாதுகாப்பு எச்சரிக்கைகள் குறித்து ஃப்ளைதுபாய் நிறுவனம் உரிய பின்னணி பரிசோதனைகளை மேற்கொண்டு முறைப்படி விசாரிக்கத் தவறியதே, 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு நடுவானில் இத்தகைய தாக்குதல் நடைபெறக் காரணமாக அமைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT