உலகம்

பிரான்ஸில் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை - தீக்கிரையான கட்டிடங்கள்

வேட்டையன்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு, பொருளாதார சமத்துவமின்மை உள்ளிட்டவற்றைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முக்கிய கட்டிடங்கள் தீக்கிரை ஆகின. மேலும், வணிக ஸ்தாபனங்கள் சூறையாடப்பட்டன.

தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 1.10 லட்சம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போல நாடு முழுவதும் சுமார் 110 இடங்களில் மக்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 60 போலீஸார் காயமடைந்துள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை மும்மடங்கு அதிகம் இருக்கும் என களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஸ், மார்சேய் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கடந்த சில வரங்களாக பிரான்ஸில் கல்வித்துறைக்கு எதிராக போராடி வரும் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர், எல்லோ வெஸ்டஸ் இயக்கித்தனரும் அடங்குவர். தொடக்கத்தில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் ஆரம்பித்தது. பின்னர் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டமாக இது மாறியது.

போராட்டம் காரணமாக அந்தந்த பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்துள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளையும் போலீஸார் வீசினர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறிய சூழலில் பிரான்ஸ் நாட்டில் உள்ள வணிக ஸ்தாபனங்கள் சூறையாடப்பட்டன. முன்னணி வணிக நிறுவனங்களின் கடைகளில் உள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. பாரிஸின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஊடக நிறுவனங்களின் கட்டிடங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். முக்கிய கட்டிடங்கள் மற்றும் கார்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

150 ஆண்டுகால டவுன் ஹால் கட்டிடம் சேதம்

பீங்கான் பொருட்கள் தயாரிப்புக்கு பிரபலமாக அறியப்படும் பிரான்ஸின் லிமோஜஸ் நகரில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகர சபை கட்டிடத்துக்கு இந்த போராட்டத்தின் போது தீ வைக்கப்பட்டது. அதை அணைக்க தீயணைப்பு படை வீரர்கள் போராடிய நிலையில், அந்த கட்டிடம் சேதமடைந்தது. இந்த கட்டிடம் உலக போர்களை தாங்கிய நிலையில் இப்போது சேதம் அடைந்துள்ளது.

“மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் நகர மன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியவர்கள், அவற்றின் மீது தாக்குதல் நடத்தியவர்கள், சூறையாடியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இத்தாலி, பெல்ஜியத்திலும் மக்கள் போராட்டம்

பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து இத்தாலி மற்றும் பெல்ஜியத்திலும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அந்தந்த நாட்டு அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.

“போராடுவது மக்களின் உரிமை. அதற்கு நான் மிகுந்த மதிப்பு தருகிறேன். இதில் இடதுசாரி அமைப்புகள் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மிலன், துரின், போலோக்னா உள்ளிட்ட நகரங்களில் அரங்கேறிய சம்பவங்கள் ஏற்புடையவை அல்ல.

போராட்டத்தைப் பயன்படுத்தி குழப்பத்தை விதைக்கும் முயற்சியில் வன்முறையாளர்கள் செயல்படுகின்றனர். அதனால் தான் சொல்கிறேன் போராடுவதற்கு உரிமை உள்ளது; ஆனால், நமது நகரங்களுக்கு நாம் தீ வைப்பதற்கு அல்ல” என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் நிலைக்கு அதன் தாராளவாத கொள்கை யேகாரணம் என்று விமர்சித்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், “இது குறித்து அமெரிக்கா எச்சரித்திருந்தது. இருப்பினும் அதை கண்டும் காணாமல் விட்டதன் பலன் இது. நிச்சயம் இந்த செயலை பிரான்ஸ் மக்கள் நிறுத்துவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT