வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் வசிக்கும் வெனிசுலா மக்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக முழக்கம் எழுப்பினர். (உள்படம்) மனைவியுடன் அதிபர் நிக்கோலஸ்படம்: பிடிஐ

 
உலகம்

வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: அதிபர் நிக்கோலஸ், மனைவி சிறைபிடிப்பு

சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்ட அதிபர் ட்ரம்ப்

செய்திப்பிரிவு

கராகஸ்: வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. அத்துடன் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார்.

இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அதிபர் நிக்கோலஸ், ‘‘போதைப் பொருள் வர்த்தகத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை. வெனிசுலாவில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால், ஆட்சியில் இருந்து என்னை அகற்றி அந்த வளத்தை அபகரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கிறார்’’ என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே, போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டன. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட முயன்றதாக சில படகுகள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இந்த சூழ்நிலையில், வெனிசுலா தலைநகர் கராகஸில் நேற்று அதிகாலை (உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணி) அடுத்தடுத்து பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாயின. அதில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. நகரின் பல பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

அவசர நிலை பிரகடனம்: அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் நிக்கோலஸ். அத்துடன் ஏகாதிபத்திய (அமெரிக்க) ஆக்கிரமிப்பை தோற்கடிக்க பொதுமக்கள் அணி திரள வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். தலைநகர் கராகஸ் மட்டுமல்லாது, மிராண்டா, ஆரகுவா மற்றும் லா குவைரா ஆகிய மாகாணங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், “வெனிசுலா மற்றும் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்டஅமலாக்கத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்" என்று கூறியுள்ளார்.

வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் கூறும்போது, “அதிபர் நிக்கோலஸ் மற்றும் முதல் பெண்மணி சிலியா புளோரஸ் ஆகியோர் எங்கே இருக்கிறார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்" என்றார். இதற்கிடையில், நிக்கோலஸ், அவரது மனைவி இருவரும் நியூயார்க் நகருக்கு அமெரிக்க போர்க்கப்பலில் அழைத்து வரப்படுவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவின் கராகஸ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. அதன் இணையதளத்தில், “கராகஸ் நகரில் பயங்கர வெடிச் சத்தம் கேட்கிறது. எனவே, வெனிசுலாவில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த செயல் ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உண்மை நிலவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுபோல, சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கு மாறும், நிதானத்தை கடைபிடிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT