கார்க் தீவு
வாஷிங்டன்: ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்காக புதிதாக 3 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் நேற்று 22-வது நாளாக நீடித்தது. ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள் என 8,000-க்கும் மேற்பட்ட இடங்களைஅமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தரைமட்டமாக்கி உள்ளன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் வயல்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானின் நடான்ஸ் நகரில் உள்ள அணு சக்தி தளத்தின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அணு சக்தி தளம் கடுமையாக சேதமடைந்தது. அங்கு அணு கதிர் வீச்சு ஏற்படவில்லை என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், ஈரான் கடற்கரையில் இருந்து 26 கி.மீ. தொலைவில் கார்க் தீவு அமைந்துள்ளது. ஈரான் முழுவதும் இருந்து குழாய்கள் மூலம் இந்த தீவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் 90% கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி வாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதப்படும் கார்க் தீவை கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கெனவே 16 போர்க்கப்பல்கள் முகாமிட்டு உள்ள நிலையில் யுஎஸ்எஸ் ட்ரிபொலி, யுஎஸ்எஸ் சான் டியாகோ, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் ஆகிய 3 அமெரிக்க போர்க்கப்பல்கள் அங்கு விரைந்துள்ளன. இவற்றில் தலா 2,200 வீரர்கள் உள்ளனர். இந்தக் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் உள்ள வீரர்கள் கடல், வான், தரை வழி போரில் திறன் வாய்ந்தவர்கள்.
430 கிலோ யுரேனியம்: ஈரானின் நடான்ஸ், போர்டோ அணு சக்தி தளங்களில் சுமார் 430 கிலோ யுரேனியம் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த தளங்களில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
90 சதவீதம் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும். செறிவூட்டப்பட்ட 42 கிலோ யுரேனியம் மூலம் ஓர் அணு குண்டை தயாரிக்கலாம். அதன்படி 10 அணு குண்டு தயாரிக்கலாம். இதை தடுக்க ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்து, அந்த 430 கிலோ யுரேனியத்தை பறிமுதல் செய்ய அமெரிக்காவும் இஸ்ரேலும் வியூகம் வகுத்துள்ளன.