வாஷிங்டன்: “ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்தத் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், “ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சார்ந்த 20 எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலவந்தி வழியாக கடந்து செல்ல ஈரான் அனுமதி வழங்கியிருக்கிறது. அமெரிக்கா, ஈரான் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருக்கிறது.
தற்போதைய சூழலில் அமெரிக்கா, இஸ்ரேல் படைகளில் தாக்குதலில் ஈரான் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது. ஈரானில் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறோம். தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்த நாடு பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஈரானின் கச்சா எண்ணெய் வளத்தை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்த தீவில் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை. எனவே கார்க் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது.
வெனிசுலா எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது. இதேபோல ஈரானின் எண்ணெய் வளமும் அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் வரும். ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒருவேளை உயிரிழந்திருக்களாம் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கலாம்.
தற்போது ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈரான் பிரதிநிதிகள் புத்திசாலிகள். அவர்கள் சூழ்நிலையை நன்று அறிவார்கள்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் இன்று 31-வது நாளாக நீடித்தது குறிப்பிடத்தக்கது.