அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி
வாஷிங்டன்: அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரின் இந்திய பயணம் கைகூடும் என நாங்கள் நம்புகிறோம். நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, அமெரிக்க தேசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் உள்ளது.
பிரதமருக்கும், அதிபருக்கும் இடையிலான நட்பு மிகவும் நெருக்கமானது. இது அரசாங்க ரீதியாக மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன் என்று ரூபியோ தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த 2020 பிப்ரவரியில் ட்ரம்ப், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அகமதாபாத் நகரில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்வில் பிரதமர் மோடி உடன் அவர் பங்கேற்றார். தொடர்ந்து டெல்லியில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பின், உலக நாடுகளுக்குப் பரஸ்பர வரிவிதிப்பு முறையை கொண்டு வந்தார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா போன்ற நாடுகள் 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியைக் கடுமையாக பாதித்தது. இதன் காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கத் தொடங்கியது. அதன்பின் இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யவும், முதலீடு செய்யவும் இந்தியா உறுதியளித்துள்ளது. இதன் காரணமாக, இந்திய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் நேரில் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையே மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ட்ரம்ப் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் பெயரில் சாலை!
ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள சாலைக்கு ‘டொனால்டு ட்ரம்ப் அவென்யூ’ எனப் பெயரிட்டுள்ளது தெலங்கானா மாநில அரசு. இதற்கு ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இந்த கவுரவத்தை பெறுகின்ற முதல் அமெரிக்க அதிபர் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.