புதுடெல்லி: அமெரிக்காவின் குடியேற்ற அமைப்பை வெளிநாட்டு வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள்கையாள்வதைக் கடினமாக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிகளைத் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, ஹெச்-1பி, கிரீன் கார்டு மற்றும் மாணவர் விசாக்களில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக இருப்பதால், புதிய விதிமுறைகள் இந்தியர்களுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் ‘மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் தளங்களில்’ பணியமர்த்தும் முறைக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும். மேலும், 50-க்கும் மேல் பணியாளர்களைக் கொண்டு, அதில் பாதிப்பேர் ஹெச்-1பி/எல்-1 விசாவில் உள்ள பெரிய நிறுவனங்கள், இனி விசா நீட்டிப்பு விண்ணப்பங்களுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஹெச்-1பி மற்றும் ‘பெர்ம்’ (PERM) சான்றிதழ்களுக்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பு 17%-லிருந்து 34% ஆக உயர்த்தப்படும். இதனால் நிறுவனங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். இதுபோன்ற பல முன்மொழிவுகள் இன்னும் சட்டமாக்கப்படவில்லை. இவை பொதுமக்களின் கருத்துகள் மற்றும் சட்டச் சவால்களைக் கடந்தே அமலுக்கு வரும். இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை இந்திய வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.