மஸ்ஸாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை எதிர்த்து ஈரான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்நாட்டு மக்கள் போராடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. இதன் காரணமாக உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
ட்ரம்ப் உறுதி: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாகத் திறக்கப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தானும் உறுதி செய்துள்ளது. அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் அது எப்போது என ஈரான் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக ஈரான் நாட்டின் வடகிழக்கு நகரான மஸ்ஸாத் நகரில் அமைந்துள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் கருப்பு சிவப்பு கொடி உடன் போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பெண்களும் பங்கேற்றனர்
“வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பதவி விலக வேண்டும், நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் பதவி விலக வேண்டும்” என முழக்கமிட்டனர். மேலும், அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் ஈரான் சில சமரசங்கள் மேற்கொண்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.