அமெரிக்க, இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிணறு தீப்பற்றி எரிகிறது. படம்: ஏஎப்பி

 
உலகம்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்: எண்ணெய் கிடங்குகள் மீது குண்டுகள் வீச்சு

சாலைகளில் ஆறாக ஓடிய கச்சா எண்ணெய் தீப்பற்றி எரிந்ததால் மக்கள் பீதி

செய்திப்பிரிவு

வாஷிங்டன்/ டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலை

யங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல்களைத் தொடங்கிஉள்ளன. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 9-வது நாளை எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தன. இதற்குபதில் கொடுக்கும் விதமாகவும், ஈரானின் பொருளாதார வலிமையை குறைக்கும் நோக்கிலும் அதன் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

          

சாலைகளில் ஓடும் எண்ணெய்: குறிப்பாக, டெஹ்ரானில் உள்ள 4 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், கச்சா எண்ணெய் வெளியேறி, சாலைகளில் ஆறாக ஓடித் தீப்பிடித்தது. இதனால், பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். அதேபோல, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ஈரானில் பல எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிவதால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியே இருளில் மூழ்கியுள்ளதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட தகவல்களின்படி, பாதுகாப்புப் பணியில் இருந்த ஈரானிய வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலின்போது உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், அமெரிக்க ஹெலிகாப்டர் பழுதுபார்க்கும் மையங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது.

ட்ரம்ப் விலை தரவேண்டும்: இதற்கிடையே, ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரானின் பாதுகாப்பு தலைவரும், காமேனியின் முதன்மை ஆலோசகருமான அலி லாரி ஜானி கூறியதாவது: எங்களது உச்ச தலைவர் காமேனி மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததை சாதாரண விஷயமாக கடந்து செல்லமுடியாது. எங்கள் உச்ச தலைவர் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம். இதற்கான விலையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்தே தீர வேண்டும்.

வெனிசுலாவில் நடந்தது போல ஈரானிலும் நடக்கும் என ட்ரம்ப் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘ராணுவ நடவடிக்கை தொடரும்’- ஈரானின் இந்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அலி லாரிஜானி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது.

பின்னர் அவர் பேசுவதை ஏன்நான் ஒரு பொருட்டாக மதிக்கவேண்டும். எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கும், சர்வதேச அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் எந்த ஒரு சக்தியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். ஈரான் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, அந்த நாடு நிபந்தனையற்ற சரணாகதி அடைய வேண்டும். அதுவரை அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் புதிய தலைவர் தேர்வு: இதற்கிடையே, அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார் என்பது தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், பாதுகாப்பு கருதி, அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடாமல் ஈரான் அரசு ரகசியம் காப்பதாகவும் கூறப்படுகிறது.

‘‘ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்வு விவகாரத்தில் மூத்த மத குருமார்களைக் கொண்ட அமைப்பில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பிறகு விரைவில் ஈரானின் புதிய உச்ச தலைவரின் பெயர் அறிவிக்கப்படும்’’ என்று மத குருமார்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் அஹ்மத் அலமோல்ஹோடா தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவராக அடுத்தடுத்து யார் வந்தாலும், அவர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT