இந்திய மென்பொருள் நிறுவனங்களான டிசிஎஸ் (TCS), இன்போசிஸ் (Infosys), விப்ரோ (Wipro), ஹெச்சிஎல் (HCL), காக்னிசென்ட் (Cognizant) மற்றும் அமெரிக்காவின் கேப்ஜெமினி (Capgemini), மைக்ரோசாஃப்ட் (Microsoft), அடோப் (Adobe) ஆகிய 8 முன்னணி நிறுவனங்களை, கிரீன் கார்டுக்கான பெர்ம் (PERM - Permanent Labor Certification) நடைமுறையில் இருந்து அமெரிக்க அரசு அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
நடவடிக்கைக்குக் காரணம் என்ன?
அமெரிக்க தொழிலாளர் துறை நடத்திய முதற்கட்ட விசாரணைகளில், இந்த 8 நிறுவனங்களும் வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்கும்போது, அமெரிக்க பணியாளர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகுதியான அமெரிக்க ஊழியர்கள் இருந்தபோதிலும், அவர்களை நிராகரித்து அல்லது அவர்களுக்கு அந்த வேலையை வழங்காமல், குறைந்த ஊதியம் வழங்கி வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் உள்ளூர்வாசிகளின் ஊதிய உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தொழிலாளர் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அந்நிறுவனங்களின் பணியாளர் மேலாண்மையிலும், இந்திய ஊழியர்களின் கிரீன் கார்டு கனவிலும் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியர்களின் பல ஆண்டு கனவு, திடீரென ஓர் அறிவிப்பில் கானல் நீராகியிருப்பது பெரும் மன உளைச்சலையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
தகுதியான அமெரிக்க ஊழியர்கள் இருந்தபோதிலும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்காக PERM விதிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
PERM என்றால் என்ன?
PERM என்பது அமெரிக்காவில் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் ஆகும். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருக்குக் கிரீன் கார்டு விண்ணப்பிக்கும் முன், குறிப்பிட்ட பணிக்குத் தகுதியான அமெரிக்கர் எவரும் கிடைக்கவில்லை என்பதையும், வெளிநாட்டவரை நியமிப்பதால் உள்நாட்டவரின் ஊதியம் பாதிக்கப்படாது என்பதையும் தொழிலாளர் துறையிடம் நிறுவனம் நிரூபித்து அனுமதி பெற வேண்டும். இந்த முதல் படிநிலையைத்தான் அமெரிக்க அரசு தற்போது முடக்கியுள்ளது.
ஹெச்-1பி (H-1B) விசா இந்தியர்களுக்கு பாதிப்பா?
அமெரிக்க அரசின் நடவடிக்கையால் ஹெச்-1பி (H-1B) விசாக்கள் உடனடியாக ரத்தாகாது. ஹெச்-1பி விசா என்பது தற்காலிகப் பணி விசா. பெர்ம் என்பது நிரந்தரக் குடியுரிமைக்கான (Green Card) முதல் படி. எனவே, பாதிக்கப்பட்ட 8 நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய ஊழியர்களின் தற்போதைய விசா செல்லுபடியாகும். அவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்ற எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவசியமான பெர்ம் சான்றிதழ் இல்லாமல் புதிதாகக் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது.
கிரீன் கார்டு விண்ணப்பங்கள் என்னாகும்?
அமெரிக்காவில் பணியாற்றி வரும் பெரும்பாலான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவில்தான் சென்றுள்ளார்கள். இந்த விசா காலம் முடியும் முன் பெர்ம் அனுமதி பெற வேண்டும், அப்போதுதான் விசா காலத்தை நீட்டிக்க முடியும்
ஊழியர்களின் திறமையைப் பார்த்து, அவர்களுக்குக் கிரீன் கார்டு வழங்க நிறுவனங்கள் முடிவெடுக்கும்போது பெர்ம் அனுமதி தேவைப்படுகிறது. இப்போது பெர்ம் அனுமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஏற்கெனவே கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களின் விண்ணப்பங்கள் காலவரையின்றி கிடப்பில் போடப்படும் சூழல் உருவாகியுள்ளது. விசா காலம் முடிந்தபின், அதை நீட்டிக்க முடியாமல் தாய்நாடு திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கல்கள்
6 ஆண்டுகள் விசா வரம்பு: ஹெச்-1பி விசாவின் அதிகபட்சக் காலம் 6 ஆண்டுகள். இதற்குள் பெர்ம் அனுமதி பெற்று, I-140 மனுத் தாக்கல் செய்தால் மட்டுமே 6 ஆண்டுகளுக்குப் பிறகும் அமெரிக்காவில் தங்கியிருக்க விசா நீட்டிப்பு பெற முடியும்.
நிச்சயமற்ற நிலை: பெர்ம் நடைமுறையை இன்னும் தொடங்காத ஊழியர்களும், விண்ணப்பித்து முடிவிற்காகக் காத்திருப்பவர்களும் கடுமையான பாதிப்பைச் சந்திப்பார்கள். ஏற்கெனவே பெர்ம் ஒப்புதல் பெற்றவர்களின் நிலை ஓரளவிற்குப் பாதுகாப்பானது என்றாலும், அதிகாரப்பூர்வத் தெளிவு இன்னும் வரவில்லை.
குடும்பங்களின் நிலை: அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்காலம் குறித்த பயத்தில் உள்ளனர். சொத்துரிமை, குழந்தைகளின் கல்வி மற்றும் நீண்டகால நிதித் திட்டமிடல்கள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன.
மாற்று வழிகள் என்ன?
நிறுவனம் மாறுதல்: கிரீன் கார்டு கனவைத் தொடர விரும்பும் ஊழியர்கள், இந்த பெர்ம் இடைநீக்க நடவடிக்கையில் சிக்காத வேறு அமெரிக்க நிறுவனங்களுக்குச் சென்று, மீண்டும் புதிதாக பெர்ம் விண்ணப்பத்தை தொடங்கலாம்.
விசா நீட்டிப்பு விதிகள்: குறிப்பிட்ட சில சட்டப் பிரிவுகளின் கீழ், பெர்ம் தாமதமானாலும் ஹெச்-1பி விசாவைத் தற்காலிகமாக நீட்டிக்கத் தேவையான தகுதிகள் இருப்பின் அதைப் பயன்படுத்தலாம்.
கிரீன் கார்டு பெறும் 3 படிகள்
1) பெர்ம் அனுமதி: தொழிலாளர் துறையிடம் அமெரிக்க ஊழியர்கள் கிடைக்கவில்லை எனச் சான்று பெறுதல்.
2) படிவம் I-140: பெர்ம் ஒப்புதலுக்குப் பின் குடியேற்றத் துறையிடம் (USCIS) குடியுரிமை மனுத் தாக்கல் செய்தல்.
3) படிவம் I-485: விசா முன்னுரிமை தேதி வந்ததும் கிரீன் கார்டுக்கான இறுதி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்.
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை இந்தியத் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இது முழுமையான விசா தடையோ அல்லது கிரீன் கார்டு ரத்தோ அல்ல. தொழிலாளர் துறையின் விசாரணை நிறைவடைந்து, விதிமீறல்களைச் சரிசெய்து முறையான விதிமுறைகளைப் பின்பற்றுவதாக நிறுவனங்கள் உறுதி அளித்தால், இந்த இடைநீக்கம் விலக்கிக்கொள்ளப்பட பிரகாசமான வாய்ப்புள்ளது.