டெஹ்ரான்: ஈரானின் இஸ்பகான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்' குண்டை வீசியது. இதில் ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறி தரைமட்டமானது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்களை குறி வைத்து அமெரிக்க, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன.
மேலும் ஈரானின் இஸ்பகான் நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்’ குண்டை வீசியது. இந்த குண்டு பூமியை துளைத்துச் சென்று ஆயுத கிடங்கை துல்லியமாகத் தாக்கியது. இதில் ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறி தரைமட்டமானது. இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
ஈரானின் இஸ்பகான் நகரில் அணு சக்தி தளம் செயல்படுகிறது. அங்குள்ள யுரேனியத்தை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக அமெரிக்க வீரர்கள் பாராசூட் மூலம் இஸ்பகான் அணு சக்தி தளத்தில் தரையிறங்கி யுரேனியத்தை எடுத்துச் செல்ல வியூகம் வகுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக இஸ்பகான் நகரில் உள்ள அனைத்து ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகளை அமெரிக்க ராணுவம் அழித்து வருகிறது.
ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள தீவில் கடல்நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வந்தது. அந்த சுத்திகரிப்பு மையத்தை அமெரிக்க போர் விமானம் நேற்று குண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது. இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ஈரான் மீது புதன்கிழமை மிகப்பெரிய வான்வழி தாக்குதல் நடத்தப்படும். அப்போது ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள் முழுமையாக அழிக்கப்படும்’’ என்று தெரிவித்தன.
ஈரானில் 1,000 பேர் கைது
தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் கடந்த சில வாரங்களில் ஈரான் முழுவதும் 1,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஈரான் ராணுவம் கூறும்போது, “தேசத்துரோக குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். அவர்களின் சொத்துகள் அரசுடமை ஆக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
குவைத் எண்ணெய் கப்பல் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
குவைத் நாட்டுக்கு சொந்தமான அல் - சல்மி என்ற எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அந்த கப்பலில் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டு இருந்தன. அவை தீப்பிடித்து எரிந்தன. துபாய் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். கப்பலில் இருந்த மாலுமிகள் உட்பட 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இஸ்ரேலின் சால்வோஸ் பகுதியை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. இதில் 8 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தினமும் 90 ஏவுகணைகளை வீசியது. தற்போது அந்த நாட்டில் ஏவுகணைகளின் இருப்பு குறைந்துவிட்டது. எனவே தினமும் 10 ஏவுகணைகள் மட்டுமே வீசப்படுகின்றன’’ என்று தெரிவித்தன.