நியூயார்க்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் இணை அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், இதுதொடர்பான விவரங்களை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்துப் பொய் பிரச்சாரம் செய்து நிதி திரட்டியதாகவும் கூறி கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நீண்டகாலமாக நடைபெற்ற இந்த வழக்கில், அதானி மீதான நடவடிக்கைகளைக் கைவிடுவதாக அமெரிக்க நீதித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த வழக்கின் பெரும்பகுதி இந்திய எல்லைக்குட்பட்டது என்றும், உள்நாட்டு வழக்குகளில் கவனம் செலுத்துவதற்காக இவ்வழக்கு் கைவிடப்படுவதாக அமெரிக்க நீதித்துறை அதிகாரி ட்ரென்ட் மெக்கோட்டர் தெரிவித்தார்.
இதையடுத்து, மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ், அதானி மீதான குற்றவியல் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.