உலகம்

ரஷ்ய எரிபொருள் வாங்கும் அமெரிக்கா: ஜெலன்ஸ்கி எதிர்ப்புக்கு ட்ரம்ப் எதிர்வினை

வேட்டையன்

மியாமி: ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் பகிர்ந்திருந்தார். இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்திருந்தார். அதற்கு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையை சமாளிக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து டீசலை இறக்குமதி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ‘சர்வதேச நாடுகளின் சந்தைகளுக்கு டீசலை விநியோகம் செய்ய ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது’ என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஏற்கெனவே ரஷ்யா மீது விதிக்கப்பட்ட எரிபொருள் சார்ந்த தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டுள்ளது. அதன்படி சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவுக்கு உடனடியாக ரஷ்யா விநியோகிக்கும் என்று தகவல். நவம்பரில் 5 லட்சம் மெட்ரிக் டன் டீசல் மற்றும் டிசம்பரில் 1 லட்சம் மெட்ரிக் டன் டீசலும் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல். இதற்கான தற்காலிக வணிகத்துக்கான உரிமத்தை அமெரிக்க கருவூலம் ஏப்ரல் 2027 வரை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு

மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டது. இந்தச் சூழலில் ரஷ்யாவில் இருந்து டீசலை இறக்குமதி செய்கிறது அமெரிக்கா.

ரஷ்யா மற்​றும் ஈரான் மீது தடைகளை விதிக்​கும் ‘லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026’-க்கு கடந்த மாதம் (செப்டம்பர்) அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டம் மூலம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொள்முதல் செய்யும் முக்கிய நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் பெற்றுள்ளார். இதன் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு வரி விதிப்பது, வரி விதிப்பு விகிதம், விதிகளை தளர்த்தி வரி விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றை ட்ரம்ப் தீர்மானிக்க முடியும் என தகவல்.

இந்தச் சட்டம் அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க வல்லுநர்கள் தகவல் தெரிவித்தனர். அதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், எரிபொருள் கொள்முதல் தடை சட்டத்தை இயற்றிய அமெரிக்காவே இப்போது ரஷ்யாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்கிறது. இது என்ன நியாயம் என்று ஒவ்வொரு சாமானியரும் கேள்வி கேட்கும் சூழல் எழுந்துள்ளது.

ஏனெனில், கடந்த காலங்களிலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரியை ட்ரம்ப் தலைமையிலான அரசு அமல் செய்தது. இந்தியாவுக்கு வணிக ரீதியாக அழுத்தம் கொடுத்ததும் உண்டு.

‘உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுகிறது. அதை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது’ என அமெரிக்கா தெரிவித்து வந்தது. தற்போது உலக அளவிலான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளாக சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன.

ஜெலன்ஸ்கி கருத்து

அமெரிக்காவுடன் ரஷ்யா மேற்கொண்டுள்ள புதிய டீசல் ஒப்பந்தம் மூலம் ரஷ்யாவின் பண பலம் அதிகரிக்கும். அதை கொண்டு போரை ரஷ்யா தொடரும். அது உக்ரைனுக்கும், உக்ரைன் மக்களுக்கும் எதிரானதாக இருக்கும் என்று ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்தார்.

ட்ரம்ப் எதிர்வினை

“உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவைப்படும் நேரம் இது என நினைக்கிறேன். அப்போது தான் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும். பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தும் ஏனோ சில காரணங்களால் அதை அவர் (ஜெலன்ஸ்கி) தவிர்த்து விட்டார்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், அவரிடம் (ஜெலன்ஸ்கி) ரஷ்யா உடனான போரில் எதை வேண்டுமானாலும் தாக்குங்கள், ஆனால், எரிபொருள் வளங்கள் மீது தாக்குதல் வேண்டாம் என சொன்னோம். அவரோ டீசல் வளங்களை குறிவைத்து தாக்குகிறார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடங்கியது. அங்கு ராணுவ சட்டம் அமலில் உள்ளதால் தேர்தல் நடத்த முடியாது. இந்நிலையில், தங்கள் மக்களின் ஆதரவு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT