தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளன. ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஈரானும் பதில் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ள ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈரானின் நிலைப்பாடு குறித்து தான் "மகிழ்ச்சியடையவில்லை" என்று ட்ரம்ப் நேற்று தெரிவித்தார். இதனையடுத்து இன்று ஈரான் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.’
‘ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அவர் தெஹ்ரானில் இல்லை. அவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் ஈரான் - இஸ்ரேல் இடையே நீடித்த 12 நாள் போர், ட்ரம்பின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அணு ஆயுதத்தை கைவிடுவது குறித்து ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியது.
ட்ரம்ப் மிரட்டல்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள வீடியோவில், “ஈரானில் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க முடியாது. அதனால்தான் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தாக்கப்பட்டன.
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நிராகரித்துவிட்டது. ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளையும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க துருப்புக்களையும் அச்சுறுத்தக்கூடியதும், விரைவில் அமெரிக்காவை அடையக்கூடியதுமான நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்குவதை ஈரான் தொடர்ந்தது.
ஈரானிய ஆட்சியானது, அமெரிக்காவை குறிவைத்து முடிவில்லாத ரத்தக்களரி மற்றும் படுகொலை பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இதனால் ஈரானில் அமெரிக்கா பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தொழிலை அமெரிக்கா தரைமட்டமாக்கி அதன் கடற்படையை அழிக்கப் போகிறது. ஈரான் மக்களே இப்போதுள்ள ஆட்சியை தூக்கி எறிந்து, உங்கள் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது அநேகமாக தலைமுறைகளுக்கு உங்களுக்கான ஒரே வாய்ப்பாக இருக்கும்.
ஈரான் தனது ஆயுதங்களைக் கீழே போட்டால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். இல்லையெனில் அவர்கள் நிச்சயமான மரணத்தை சந்திக்க நேரிடும்" என்றும் ட்ரம்ப் கூறினார்.