உலகம்

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா - டென்மார்க் இடையே ஒப்பந்தம்: ட்ரம்ப் தகவல்

மோகன் கணபதி

வாஷிங்டன்: கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை உருவாக்கவும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அங்கு தங்கள் சொந்த ராணுவ தளங்களை அமைப்பதை தடுக்கவும் அமெரிக்கா, டென்மார்க், கிரீன்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியவற்றுடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகள் மீது அமெரிக்காவுக்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் அனைத்துக் கவலைகளுக்கும் முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்காவுக்கு எந்தச் செலவும் ஏற்படாது. கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை கிரீன்லாந்தில் மேற்கொள்ளும் முழு அதிகாரமும் அமெரிக்காவுக்கு என்றென்றும் இருப்பதை உறுதிசெய்ய, எனது வழிகாட்டுதலின் பேரில் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதிநிதிகளுடன் நாங்கள் பணியாற்றினோம்.

இனிவரும் காலங்களில், அமெரிக்காவின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, அமெரிக்காவின் எதிரி நாடுகள் எதுவும் கிரீன்லாந்தில் ராணுவ தளத்தையோ, ராணுவ இருப்பையோ கொண்டிருக்கவோ அல்லது முக்கியமான முதலீடுகளைச் செய்யவோ முடியாது.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க அதிபர்கள் கிரீன்லாந்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். ஆனால் அவர்களால், இவ்விஷயத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. மிக முக்கியமான இந்த விவகாரத்திற்கு நிரந்தரமான மற்றும் உறுதியான தீர்வை வழங்கிய அதிபராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

இது ஒரு ‘காலவரையறை இல்லாத’ ஒப்பந்தம். எனவே, இதற்கு காலாவதி தேதி இல்லை. இப்போது நிகழ்ந்துள்ள இந்த விஷயத்தைக் குறித்து நாங்கள் பெருமையும் கவுரவமும் கொள்கிறோம். இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்தையும் அமெரிக்க மக்கள் பெரிதும் மதிப்பார்கள்.

கிரீன்லாந்தின் பொருத்தமான பகுதிகளில் பெரிய அளவிலான ராணுவ இருப்பை உருவாக்கும் பணிகளை நாங்கள் உடனடியாகத் தொடங்குவோம். இப்பகுதியின் மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகளில் கிரீன்லாந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

இந்த ஒப்பந்தம், அமெரிக்கா, டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் எங்கள் நட்பு நாடுகள் அனைத்திற்கும் மிகச் சிறந்த ஒன்றாகும். பரந்த மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியைக் கொண்டு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் அற்புதமான மக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நாங்கள் இதனை மிகவும் பாதுகாப்பாகப் பராமரிப்போம்! இது அமெரிக்காவுக்கு ஒரு கனவு நனவாகும் தருணம். இது மிகவும் முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT