கொழும்பு: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக்கவை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசினார்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை அதிபர் திசநாயக்கவின் அரசு இரண்டு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை ராஜ்நாத் சிங் அவரிடம் பகிர்ந்து கொண்டார். இந்தியாவும், இலங்கையும் வரலாற்று ரீதியாகவும் நாகரீக ரீதியாகவும் இரட்டையர்கள் போன்ற பிணைப்பைக் கொண்டது. பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்ய இணைந்து செயல்பட இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அதிபர் திசநாயக்க மீண்டும் உறுதி அளித்துள்ளார்.
மேலும், டிட்வா புயலின் போது ஆபரேஷன் சாகர் பந்து மூலம் இந்தியா வழங்கிய நிவாரண உதவிகளுக்கு் இலங்கை அதிபர் நன்றி தெரிவித்தார்.
இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்ட மூன்று ‘பெய்லி’ பாலங்களை இரு தலைவர்களும் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தனர்.இலங்கை விமானப் படையின் பயன்பாட்டில் உள்ள எல்-70 ரக துப்பாக்கிகளை தரம் உயர்த்துவது உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின்போது கையெழுத்தாகின. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், கஷ்டமான காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையின் பக்கம் உறுதியாக நிற்கும் என தெரிவித்தார்.