சர்வதேச அரசியலில் ‘வல்லான் வகுத்ததே வழி’ என்ற விதியை உடைத்தெறிந்து இருக்கிறது தி ஹேக் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு. நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் (ICJ), ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு ‘இனப்படுகொலை’ (Genocide) நிகழ்த்தியதாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நவம்பர் 19 அன்று வழங்கியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் வரலாற்றில், ஒரு நாட்டின் அரசாங்கத்தை நேரடியாக இனப்படுகொலைக் குற்றத்துக்குப் பொறுப்பேற்கச் செய்து வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும். இது மியான்மருக்கு மட்டுமின்றி, அகதிகள் பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்டங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறிய ஆப்பிரிக்க நாடான காம்பியா 2019-ஆம் ஆண்டு தொடுத்த வழக்கில், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு செய்தது இனப்படுகொலை எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது சர்வதேசச் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம். இலங்கைத் தமிழர் படுகொலை முதல் உலகின் பல இன அழிப்புகளுக்கு இனி இதுவொரு சட்ட முன்னுதாரணமாகப் பார்க்கப்படும்.
2017-ஆம் ஆண்டில் சொந்த மண்ணிலேயே குடியுரிமை பறிக்கப்பட்டு, கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டும், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், ராணுவத் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தப்பி பிழைத்தனர் ரோஹிங்கியா. குழந்தைகள் ஆறுகளில் வீசப்பட்ட கொடூரமும் அரங்கேறியது. அந்த ரத்தக் கறை படிந்த நாட்களுக்கு மத்தியில், கடலிலும் காட்டிலும் உயிரைக் கையில் பிடித்து ஓடிய ரோஹிங்கியா மக்களின் கண்ணீருக்கு இப்போது சர்வதேச நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது.
இது வெறும் மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான தீர்ப்பு மட்டும் இல்லை. எல்லையோர அகதிகளை 'அச்சுறுத்தலாக'ப் பார்க்க வேண்டுமா அல்லது 'இனப்படுகொலையில் இருந்து தப்பி வந்தவர்களாக'ப் பார்க்க வேண்டுமா என்ற சட்ட நெருக்கடியை இந்தியாவின் வாசலிலும் இது கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
'சட்டவிரோதக் குடியேறிகள்' என இந்தியா யாரை நாடு கடத்த நினைக்கிறதோ, அவர்களுக்கு எதிராக மியான்மர் அரசு 'இனப்படுகொலை' நடத்தியதாக உலகின் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கப்போகிறது?
'ரோஹிங்கியா மக்களைத் திருப்பி அனுப்புவோம்' என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கும், 'அங்கு நடப்பது இனப்படுகொலை' என்ற ஐ.நா. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடு, இந்திய அரசியலிலும் நீதிமன்றங்களிலும் புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
ரோஹிங்கியாகளை விரட்டிய மியான்மர்:
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் வசித்து வந்தவர்களே ரோஹிங்கியா மக்கள். அந்நாட்டில் வாழ்ந்தபோதிலும், 1982-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, "சட்டவிரோத வங்காளக் குடியேறிகள்" என முத்திரை குத்தப்பட்டனர். பவுத்த பெரும்பான்மை கொண்ட மியான்மரில், ராணுவ ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைக்கவும், தீவிர தேசியவாத சக்திகளைத் திருப்திப்படுத்தவும் முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்களை எதிரிகளாகச் சித்தரித்தனர். வளம் நிறைந்த ராக்கைன் பகுதியைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் முக்கிய நோக்கமாக இருந்தது.
2017 ஆகஸ்டில் ராக்கைன் மாநிலத்தில் “தூய்மைப்படுத்தும் நடவடிக்கை” என்ற பெயரில் அந்நாட்டு ராணுவமும் உள்ளூர் குழுக்களும் நடத்திய கொடூரங்களை நீதிமன்றம் ஆவணப்படுத்தியுள்ளது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது (மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி உயிரிழப்பு 24,000 வரை இருக்கலாம்).
ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சுமார் 1,000 கிராமங்களில் 40 சதவீதம் அழிக்கப்பட்டன. 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வங்கதேசத்திற்குத் தப்பி ஓடினர். மொத்தமாக 13 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக உள்ளனர்.
வழக்கு தொடுத்த ஆப்பிரிக்க நாடு:
இந்த மியான்மர் சம்பவத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா, 57 இஸ்லாமிய நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) ஆதரவுடன், 2019 நவம்பரில் சர்வதேச நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தது. பின்னர் 11 நாடுகள் இணைந்தன.
சர்வதேச நீதிமன்றத் தலைவர் நீதிபதி யுஜி இவாசாவா (Yuji Iwasawa) தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 3 மணிநேரம் தீர்ப்பை வாசித்தது. 9-க்கு 6 என்ற வாக்கு வித்தியாசத்தில் மியான்மர் அரசு ரோஹிங்கியா மக்களை அழிக்கும் நோக்கத்துடன் இனப்படுகொலை செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளதாக தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
> சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில். “வேண்டுமென்றே கொல்வது, உடல் - மன பாதிப்பு ஏற்படுத்துவது, பிறப்புகளைத் தடுப்பது ஆகிய செயல்களில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.
> ராணுவ நடவடிக்கைகளின் போது, ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டனர்; பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பது உறுதியானது. இந்த அழிப்பில் 10,000 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
> இனப்படுகொலை நோக்கத்தை நிரூபிப்பது கடினம் என்பதால் முன்பு 2007 செர்பியா, 2015 குரோஷியா - செர்பியா வழக்குகளில் இனப்படுகொலை நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ரோஹிங்கியா வழக்கில் அட்டூழியங்களின் அளவும் தன்மையும் அழிக்கும் நோக்கத்தைக் காட்டுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
> ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக ராணுவம் மற்றும் பிற குழுக்கள் நடத்திய இனப்படுகொலையைத் தடுக்க மியான்மர் அரசு தவறிவிட்டது; ஆதாரங்களையும் அழித்துவிட்டது
> ஐ.நா. சாசனத்தின் 94-வது பிரிவின்படி மியான்மர் இந்தத் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும்; மேல்முறையீடு கிடையாது. வன்முறை மற்றும் பாகுபாட்டை நிறுத்தச் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும், குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், அகதிகளைப் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அனுமதித்துச் சொத்துக்களைத் திருப்பித் தர வேண்டும், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கி 2 ஆண்டுகளுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவும் ரோஹிங்கியாக்களும்:
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சுமார் 22,500 ரோஹிங்கியாக்கள் உட்படச் சுமார் 40,000 பேர் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவர்களை "சட்டவிரோதக் குடியேறிகள்" எனக் கூறும் மத்திய அரசு, பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்வைத்து நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், அகதி அந்தஸ்து வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு, இந்தியாவைக் கட்டுப்படுத்துமா?
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு காம்பியா, மியான்மரை மட்டுமே நேரடியாகக் கட்டுப்படுத்தும் என்றாலும், இந்தியா 1948-ஆம் ஆண்டு இனப்படுகொலை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. 'நான்-ரிஃபவுல்மென்ட்' கோட்பாடும் உள்ளது. வடகிழக்கு பாதுகாப்பு, சீனாவின் செல்வாக்கு காரணமாக மியான்மருடன் ராஜதந்திர உறவைப் பேணும் இந்தியா, மியான்மர் ஏற்காத நிலையில் ரோஹிங்கியாக்களை உடனடியாக நாடு கடத்த முடியாது.
எனவே, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும் வரை கண்காணிப்பு முகாம்கள் மற்றும் சர்வதேச அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு என்ற நிலையையே இந்தியா தொடர வாய்ப்புள்ளது.