துணை விமானி ஹமாம் அல் ஹமாமி
துபாய்: ‘ஃபிளை துபாய்’ பயணிகள் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய ஓமனை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, விமானத்தை தகர்க்க திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கடுமையான நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் நாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை இஸ்ரேல் நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிடியில் உள்ள துணை விமானி ஹமாம் அல் ஹமாமியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கெடுத்துள்ளதாகவும் தகவல்.
பரபரப்பு வாக்குமூலம்
“அவர் விமானத்தை தகர்க்க திட்டமிட்டார். மரணம் குறித்த அச்சம் அவருக்கு இல்லை” என்று சவுதி அரேபியா போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்ததாக அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்த சூழலில்தான் துணை விமானி ஹமாம் அல் ஹமாமிக்கு மரண தண்டனை என்ற கடுமையான நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் நாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி கடந்த புதன்கிழமை (செப்.30) காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார்.
திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார். சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.