துபாய்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரில் இணைய யுஏஇ தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்காக ஈரானுக்கு எதிராக போரிடும் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இணையத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி அறிக்கையின்படி, இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர யுஏஇ அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை பலவந்தமாகத் திறக்க ஒரு கூட்டணியை உருவாக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் ராணுவ சக்திகளை யுஏஇ தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன், இந்த அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறது. இது குறித்த வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய கண்ணிவெடிகளை அகற்றுவது உள்ளிட்ட ராணுவப் பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக யுஏஇ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையவோ அல்லது கடந்து செல்லவோ அமீரகம் தடை விதித்துள்ளது.
இருப்பினும், ‘கோல்டன் விசா' (10 ஆண்டு வசிப்பிட அனுமதி) வைத்திருப்பவர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், துபாயில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த ஈரானிய மருத்துவமனை மற்றும் ஈரானிய கிளப் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. ஈரானில் உள்ள ஆட்சி வீழ்த்தப்படும் வரை போர் தொடர வேண்டும் என சவுதி அரேபியா உள்ளிட்ட இதர வளைகுடா நாடுகளும் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ஈரானை எதிர்கொள்ள பிராந்தியத்தில் உள்ள முக்கியமான நாடுகளுடன் இஸ்ரேல் புதிய கூட்டணிகளை உருவாக்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சில அரபு நாடுகள் தங்களோடு இணைந்து போரிடுவது குறித்துப் பேசி வருவதாக அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.