உலகம்

நேபாள நீர்மின் சுரங்கப்பாதையில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

பேரழிவு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்த அதிசயம்

மோகன் கணபதி

காத்மாண்டு: நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையிலிருந்து இருவர் இன்று உயிருடன் மீட்கப்பட்டனர். திடீர் வெள்ளம் மூலம் பேரழிவு நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புப் பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நேபாளம் பெரும் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்தித்தது. போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் கரையோர பகுதிகளில் பேரழிவுகளை ஏற்படுத்தியது.

வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக போட்டேகோஷி ஆற்றுப் பகுதியில் அமைந்திருந்த ஏராளமான நிர்மின் திட்ட சுரங்கப்பாதைகளில் சுமார் 900 பேர் சிக்கிக்கொண்டிருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையிலிருந்து இன்று இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பேரழிவு நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகு இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் கபீர் மஹர்ஜன் (45), சஞ்சய் ஷா (30) என்பது தெரியவந்துள்ளது.

சுரங்கப்பாதையின் நுழைவுவாயில் பகுதியை வெடிவைத்து தகர்த்து பின்னர் நடத்தப்பட்ட மீட்புப் பணியின் மூலம் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக காத்மாணடுவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தரையில் இருந்த ஒரு பள்ளத்தில் இருந்து கபீர் மஹர்ஜன் வெளியே இழுக்கப்பட்டு பின்னர் ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சஞ்சய் ஷா முகம் முழுவதும் சேறு படிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருவரும் உயிருடன் மீட்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அங்கிருந்தவர்கள் உற்சாக குரலெழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சஞ்சய் ஷாவின் உடல் செயல்பாடுகள் இயல்பாக உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் இயந்திர கட்டுப்பாட்டு அறையில் சஞ்சய் ஷா பணியாற்றி வந்துள்ளார். “சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நேரத்தில் நான் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு இருந்தேன். சுரங்கப்பாதைக்குள் இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் உயிருடன் இருக்கக்கூடும். ஆழமான பகுதிகளில் இன்னும் கூடுதல் நபர்கள் இருக்கலாம்.” என சஞ்சய் ஷா மீட்புக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT