அங்காரா: காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்த சம்பவத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.
காசா எல்லை முற்றுகையை உடைத்து உதவிகளை வழங்க மே மாதத்தில்'குளோபல் சமுத் ஃப்ளோட்டிலா அமைப்பைச் சேர்ந்த 50 கப்பல்கள் துருக்கியிலிருந்து புறப்பட்டன. சர்வதேச கடல் எல்லையில் 430 தொண்டு ஊழியர்களுடன் பயணித்த இந்த உதவி கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து இடைமறித்தது.
அதில் இருந்த தொண்டு ஊழியர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியதுடன் பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
இச்சம்பவம் குறித்துத் துருக்கி நீதித் துறை அமைச்சர் அகின் குர்லெக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ஜூலை 14 அன்று பிறப்பிக்கப்பட்ட கைது வாரன்டின் அடிப்படையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த அஃபெக் மொஸ்கோவிச் ஆகிய இருவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு துருக்கி நீதித் துறை முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சட்டவிரோதக் காவல், சித்திரவதை, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் கப்பல்களைக் கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023 அக்டோபர் 7 சம்பவத்துக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைத் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தொடர்ச்சியாக கண்டித்து வரும் நிலையில், துருக்கியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.