வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றியது தனது வாழ்நாளின் மிகப்பெரிய கவுரவம் மற்றும் ஒரு அற்புதமான பயணம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளரும், எனது மிகவும் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களில் ஒருவருமான கரோலின் லீவிட், தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுவதற்காக இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவரது இந்த முடிவை நான் மதிக்கிறேன்.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற நாம் பணியாற்றி வரும் சூழலில், கரோலின் தொடர்ந்து எனது முதன்மைத் தனி ஆலோசகராகவும், குடியரசுக் கட்சியின் செல்வாக்குமிக்கக் குரலாகவும் திகழ்வார். வெள்ளை மாளிகை ஊடக பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்த சிறந்த அதிகாரிகளில் கரோலினும் ஒருவர். சிறப்பான பணிக்காக அவருக்கு எனது நன்றிகள். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.