உலகம்

அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் முழுவதும் குண்டு மழை பொழியும்: ட்ரம்ப் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ‘‘அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளா​விட்​டால், ஈரானில் குண்டு மழை பொழி​யும்’’ என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் ஈரான் மீது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 8-ம் தேதி இருதரப்​புக்கு இடையே 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இதனிடையே கடந்த 11, 12-ம் தேதி​களில் அமெரிக்கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​தது.

இதைத் தொடர்ந்து இஸ்​லா​மா​பாத்​தில் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்​தையை நடத்த ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. அணு ஆயுதம், ஹார்​முஸ் ஜலசந்தி கட்​டுப்​பாடு, லெப​னான் போர் நிறுத்​தம் உள்​ளிட்ட விவ​காரங்​களில் இரு தரப்​புக்​கும் இடையே ஒரு​மித்த கருத்து எட்​டப்​பட​வில்​லை. இதனால் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்தை தள்ளி வைக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​தச் சூழலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப் தலை​மையி​லான குழுக்​கள் இஸ்​லா​மா​பாத்​தில் இன்று பேச்​சு​வார்த்தை நடத்​தக் கூடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஆனால், பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​பது குறித்து முடிவு எடுக்​க​வில்லை என்று ஈரான் தலை​வர்​கள் தொடர்ந்து கூறி வரு​கின்​றனர். இதனால் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெறுமா என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது.

இந்​தச் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறிய​தாவது: ஈரானுக்கு எதி​ரான போரில் அமெரிக்கா மாபெரும் வெற்றி பெற்​றிருக்​கிறது. இந்​தப் போரில் அமெரிக்க ராணுவம் அசாத்​திய துணிச்​சலை வெளிப்​படுத்தி உள்​ளது. ஆனால், நியூ​யார்க் டைம்​ஸ், வால் ஸ்டீரிட் ஜர்​னல் உள்​ளிட்ட நாளிதழ்​கள் பொய் செய்​தி​களை வெளி​யிட்டு வரு​கின்​றன. ஈரான் கடற்​படை, விமானப் படைகள் முழு​மை​யாக அழிக்​கப்​பட்டு உள்​ளன. ஈரானின் அணு சக்தி தளங்​கள் தகர்க்​கப்​பட்டு உள்​ளன. அந்த நாட்​டின் மூத்த தலை​வர்​கள் கொல்​லப்​பட்டு உள்​ளனர்.

மனி​தாபி​மான அடிப்​படை​யில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்​காலிக போர்நிறுத்​தம் அமலில் உள்​ளது. இந்த போர்நிறுத்​தம் புதன்​கிழமை​யுடன் (இன்​று) நிறைவடைகிறது. அதற்​குள் அமெரிக்கா​வுடன் ஈரான் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும். இல்​லை​யெனில் ஈரான் முழு​வதும் குண்டு மழை பொழி​யும். அந்த நாட்​டின் மீது தாக்​குதல் நடத்த துளி​யும் தயங்க மாட்​டோம்.

போர் நிறுத்​தத்தை நீட்​டிக்​கும் திட்​டம் இல்​லை. என்​னைப் பொறுத்த வரை இஸ்​லா​மா​பாத் பேச்​சு​வார்த்​தை​யில் ஈரான் பிர​தி​நி​தி​கள் கண்​டிப்​பாக பங்​கேற்​பார்​கள். இல்​லை​யெனில் அதற்​கான விளைவு​களை அந்த நாடு சந்​திக்​கும். ஈரானிடம் அணு ஆயுதங்​கள் இருக்​கக் கூடாது என்​ப​தில் மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறோம். இதற்கு தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

ஈரான் ராணுவத்​தின் பிர​தான படைப் பிரி​வான இஸ்​லாமிய புரட்​சிகர படை (ஐஆர்​ஜிசி) அந்த நாட்டை நிர்​வகித்து வரு​கிறது. ஐஆர்​ஜிசி படை​யுடன் மிக நெருங்​கிய தொடர்​பில் உள்ள ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸுடன் முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இரண்​டாம் கட்ட பேச்​சு​வார்த்தை குறித்து சமூக வலை​தளத்​தில் அவர் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கப்​பல் போக்​கு​வரத்தை அமெரிக்கா முடக்கி உள்​ளது. மேலும் போர் நிறுத்​தத்​தை​யும் மீறி வரு​கிறது. அழுத்​தம், மிரட்​டல்​களுக்கு நடு​வில் அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க முடி​யாது. போருக்கு நாங்​கள் மீண்​டும் தயா​ராகி வரு​கிறோம்​. போர்க்​களத்​தில்​ புதி​ய ஆயுதங்​களை களமிறக்​கு​வோம்​” என்​று எச்​சரிக்​கை விடுத்​துள்​ளார்​.

ஈரானை வரவழைக்க பாகிஸ்தான் முயற்சி: பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 22-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப். 22 மாலை 5.20) நிறைவடைகிறது.

இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஈரான் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. ஈரான் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் போரால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், காஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விமானப் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், சீனா உள்ளிட்டவை தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக அமெரிக்கா, ஈரான் தரப்பிடம் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் பயனாக அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT