உலகம்

அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை

டெக்ஸ்டர்

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நமது ராணுவ அதிகாரிகள் மூலம் எனக்கு இப்போதுதான் ஒரு தகவல் கிடைத்துள்ளது. நேற்று இரவு ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கா இந்தத் தாக்குதலை சாதாரணமாகக் கடந்து செல்லாது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “இருப்பினும், இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா தகுந்த முறையில் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்” என்றும் எச்சரித்துள்ளார்.

ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விழுந்த இரண்டு மணி நேரத்துக்குள், அமெரிக்க ஐந்தாவது கடற்படையின் கீழ் இயங்கும் டாஸ்க் ஃபோர்ஸ் 59 பிரிவுக்குச் சொந்தமான கடற்பரப்பு ட்ரோன் மூலம் இரு விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு, பின்னர் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவ வரலாற்றிலேயே கடலில் விழுந்த வீரர்களை ஒரு ட்ரோன் வெற்றிகரமாக மீட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதற்கான காரணம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை இன்னும் முறையான விசாரணை அறிக்கையை வெளியிடாத போதிலும், அதிபர் ட்ரம்ப் இதனை ஈரானின் நேரடித் தாக்குதல் என அறிவித்து பதிலடி கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளது மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT