டொனால்ட் டிரம்ப். 
உலகம்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்து: வெளியாகப்போகும் மர்மங்கள்!

வெற்றி மயிலோன்

வாஷிங்டன்: பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக பேசப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து கோப்புகளையும் வெளியிட அனுமதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த வழக்கில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது அதற்கு ஒரு காரணம்.

இந்த சூழலில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கின் அனைத்து கோப்புகளையும் வெளியிடக்கோரி ஜனநாயக கட்சியினர் கடுமையாக அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆரம்பத்தில் அந்த முயற்சிகளை எதிர்த்த ட்ரம்ப், பிறகு அவரது குடியரசு கட்சியினரும் கோரிக்கை வைத்ததால் கோப்புகளில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து 427-1 வாக்குகளில் இது தொடர்பான மசோதாவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியது. கிளே ஹிக்கின்ஸ் மட்டும் மசோதாவை எதிர்த்தார். விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அப்பாவி மக்கள் பற்றிய தகவல்களை வெளியிட இந்த மசோதா வழிவகுக்கும் என்று அவர் வாதிட்டார். பின்னர் செனட் சபை வாக்கெடுப்பு இல்லாமல் இம்மசோதாவை நிறைவேற்றியது.

இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘ஜனநாயகக் கட்சியினர் எங்கள் அற்புதமான வெற்றிகளிலிருந்து திசைதிருப்ப முயற்சிப்பதற்காக, குடியரசுக் கட்சியை விட அவர்களை அதிகம் பாதிக்கும் எப்ஸ்டீனின் பிரச்சினையைப் பயன்படுத்தியுள்ளனர்’ என்று மசோதாவில் கையெழுத்திட்டது குறித்து அறிவித்தார்.

இந்த மசோதாவின்படி, நீதித்துறை எப்ஸ்டீனுடன் தொடர்புடைய அனைத்து கோப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளையும், 2019 இல் சிறையில் அவர் இறந்தது தொடர்பான விசாரணை பற்றிய அனைத்து தகவல்களைையும் 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ட்ரம்ப் நண்பராக இருந்தார் என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் எப்ஸ்டீனின் குற்றங்கள் பற்றி தனக்குத் தெரியாது என்றும், நீண்ட காலத்திற்கு முன்பே அவருடனான உறவுகளை துண்டித்துவிட்டதாகவும் ட்ரம்ப் கூறி வருகிறார்.

பிரச்சினையின் பின்னணி: கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது 2019 ஆகஸ்டில் அவர் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இந்நாள், முன்னாள் பிரபலங்களை கலக்கம் கொள்ளச் செய்யும் வகையில் நீதிபதி உத்தரவு லீக்காகும் தகவல்களும் அமைந்துள்ளன.

எப்ஸ்டீன் - பில் கிளின்டன் தொடர்பு: நீதிமன்ற ஆவணங்களில் பில் கிளின்டன் "Doe 36" என்று ரகசிய குறியீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த ரகசியக் குறியீடு 50 முறை ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. வழக்கு தொடர்ந்த வர்ஜினியா, தான் பில் கிளின்டனை ஒரு தீவில் இரண்டு முறை பார்த்திருப்பதாகவும் அப்போது அவருடன் இளம் பெண்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்தத் தீவு எப்ஸ்டீனுக்கு சொந்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முன்னரே கிளின்டன் தரப்பு பலமுறை மறுத்துள்ளது. அது தொடர்பாக நடந்த விசாரணையில் பில் கிளின்டனின் விமானப் பயண ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. அப்போது, அவர் எப்ஸ்டீனின் விமானத்தைப் பயன்படுத்தி பாரிஸ், பாங்காக், ப்ரூனே ஆகிய இடங்களுக்குச் சென்றது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயணங்களை அதிபர் பதவிக்காலத்துக்குப் பின்னர் கிளின்டன் மேற்கொண்டுள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி ஜொஹான ஸ்ஜோபெர்க் என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணும் கிளின்டன் சர்ச்சையை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சியம் கூறியுள்ளார். எப்ஸ்டீன் என்னிடம், “கிளின்டனுக்கு உங்களைப் போன்ற இளம் பெண்களையே பிடிக்கும் என்று கூறினார்” என சாட்சியம் கூறியிருக்கிறார். கிளின்டன் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையைச் சேர்ந்த 22 வயது பணிப் பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக சர்ச்சையில் சிக்கியது நினைவுகூரத்தக்கது.

ஸ்டீபன் ஹாக்கிங் - ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு: 2015-ல் வர்ஜினியா கிஃபரின் வழக்கையடுத்து எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிஷ்லெயின் மேக்ஸ்வெல்லுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், “ஸ்டீபன் ஹாக்கிங் பாலுறவுக்கான வயதை எட்டாத பெண்களுடன் உறவு கொண்டார் என்று வெர்ஜினியா கூறுவது பொய் என்று சொல்ல முன்வரும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர், தெரிந்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு பெரும் தொகையை சன்மானமாக வழங்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இளவரசர் ஆண்ட்ரூவும்.. - இந்த பாலியல் குற்றச்சாட்டு வரிசையில் இடம்பெற்றுள்ள இன்னொரு பெரும்புள்ளி இளவரசர் ஆண்ட்ரூ. ராணி எலிச்பெத்தின் மகன்களில் ஒருவரான இளவரசர் ஆண்ட்ரூ, சட்டரீதியான வயதுக்கு கீழே இருந்த அமெரிக்கப் பெண் வர்ஜீனியாவுடன் பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று நீதிமன்ற ஆவணங்களில் உள்ளது.

இளவரசர் முறையற்ற வகையில் நடந்து கொண்டார் எனக் கூறும் வகையிலான இந்தக் கூற்றுகள் முற்றாக உண்மைக்கு புறம்பானவை என்று நீண்ட காலமாக பக்கிங்ஹாம் அரண்மனை மறுத்து வருகிறது. இருப்பினும், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நண்பர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பது கவனிக்கத்தக்கது. எப்ஸ்டைனால், அவருடன் இருந்த இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு தான் நிர்பந்திக்கப்பட்டதாக வர்ஜீனியா கூறியிருக்கிறார்.

இவர்களைத் தவிர ஆல்ஃபபெட் இங்க் (Alphabet Inc) என்ற கூகுள் நிறுவனத்தின் தாய்க்கழகத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ் மீதும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு பற்றி நீதிமன்ற ஆவணங்களில் இருக்கிறது. நோபல் பரிசு புகழ் லாரன்ஸ் க்ராஸ், மறைந்த பாப் கிங் மைக்கேல் ஜாக்சன், மேஜிக் கலைஞர் டேவிட் காப்பர்ஃபீல்டு, காமெடி நடிகர் கிறிஸ் டக்கர், நடிகர் கெவின் ஸ்பேசி ஆகியோரும் ஜெஃப்ரியின் வர்ஜின் தீவுகளில் நடந்த பாலியல் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

எப்ஸ்டீனின் வர்ஜின் தீவுகளில் நடந்த சிறுமிகள், இளம் பெண்களுடனான பார்ட்டி கொண்டாட்டங்களில் பில் கிளின்டன், ஸ்டீபன் ஹாக்கிங் உள்பட இத்தனை பெரும்புள்ளிகளும் ஈடுபட்டனரா என்ற வாத விவாதங்கள் இந்த ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ ஆவணங்களால் வலுத்துள்ளது.

SCROLL FOR NEXT