அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: ஈரானின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரப்படும் என்றும், வருங்காலப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கிய நிபந்தனையாக சேர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் பிரதிநிதிகள் கோரியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அதற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் சாலையோர வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் பல்வேறு மோதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் கடுமையாகக் காயமடைந்தவர்களுக்காக ஈரானிடம் இழப்பீடு கோருகிறேன். யூ.எஸ்.எஸ் கோல் போர்க்கப்பல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், போர்களில் பலியான ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் ஈரானில் நடைபெற்ற போராட்டங்களின் போது அந்நாட்டு அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் பலியான 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் எந்தவொரு எதிர்காலப் பேச்சுவார்த்தையிலும் இந்த இழப்பீட்டுக் கோரிக்கையை உறுதியாக முன்வைக்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.