வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப். படம்: ஏஎப்பி
வாஷிங்டன்: இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். பின்னர், கடந்த ஏப்ரலில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரிவிகிதங்களை அவர் அறிவித்தார். இதை எதிர்த்து அமெரிக்காவின் 12 குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தும் 12 மாகாண அரசுகள் சார்பில் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துப் பெடரல் சர்க்யூட் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுமேல்முறையீடு செய்தது. அங்கும் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து, நேற்று முன்தினம் தீர்ப்புவழங்கியது. தலைமை நீதிபதி உட்பட 6 நீதிபதிகள், ட்ரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்றும், 3 நீதிபதிகள் வரி விதிப்பு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் புதிய வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 3 மணி நேரத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த அதிருப்தி அளிக்கிறது. சில வெளிநாட்டு சக்திகளின் சதியால் உச்ச நீதிமன்றம் எதிர்மறையாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சில நீதிபதிகள் முட்டாள்கள்போல செயல்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேசப்பற்று இல்லை.எனினும் 3 நீதிபதிகள் அமெரிக்காவின் நலனை முன்னிறுத்தி தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். நான் விதித்த பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன்.
முதல்கட்டமாக, அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே வசூலித்த வரியை திருப்பி வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, அமெரிக்க அரசு ஏற்கெனவே வசூலித்த வரிப் பணத்தை எந்த நிறுவனத்துக்கும் திரும்ப வழங்காது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 13.5% வரி: அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்புக்கு முன்பாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 10 சதவீத வரியை விதித்திருந்தது.
எனினும், அமெரிக்காவுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற அந்தஸ்து காரணமாக இந்தியப் பொருட்களுக்கு 3.5 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.
தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வந்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் தொலைபேசியில் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியப் பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும்" என்று அறிவித்தார். இது தொடர்பாக இரு நாடுகளிடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவின் பழைய வரி விதிப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, இந்தியப் பொருட்களுக்கு 3.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும்.
எனினும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் புதிதாக அறிவித்த 10 சதவீத வரி விதிப்பு பிப். 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பழைய 3.5 சதவீத வரி, புதிய 10 சதவீத வரி என இந்தியப் பொருட்களுக்கு 13.5 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், இது தொடர்பாக அமெரிக்க அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மத்திய அரசு கருத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மத்திய தொழில், வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கூறியதாவது: அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அமெரிக்க அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்றும் இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.