அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன் / புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக நீடிக்கிறது. இதேபோல அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய இந்தியாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த 2022-23-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது. 2023-24-ல் 7.3%, 2024-25-ல் 7.2 சதவீதம் என நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக நீடித்து வருகிறது. தொடர்ந்து 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக பதிவாகி உள்ளது.
இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதமாகவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகவும் உள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இப்போதைய சூழலில் உலகில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. வரும் காலத்திலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் என்று சர்வதேச நிதி அமைப்புகள் கணித்து உள்ளன.
அமெரிக்காவில் உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த செட்படம்பரில் அமெரிக்காவின் பணவீக்கம் 3.6 சதவீதமாக அதிகரித்தது. இதை கட்டுப்படுத்தி இரண்டு சதவீதத்துக்கும் கீழ் பண வீக்கத்தைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக அமெரிக்க மத்திய வங்கி கடந்த செப்டம்பர் மாதம் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ள மத்திய வங்கி கூட்டத்தில் 0.5 சதவீதம் வரை வட்டி உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்க மத்திய வங்கி தலைவர் கெவின் வார்ஷுக்கும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே நேரடியாக மோதல் நீடிக்கிறது.
இதுதொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. நியாயமான காரணம் இன்றி வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இது மிகவும் தவறான அணுகுமுறை ஆகும். இந்தியாவில் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய இந்தியாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் அமெரிக்காவில் 14 முதல் 15 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். 20 சதவீத பொருளாதார வளர்ச்சியைக்கூட எட்டிப் பிடிக்க முடியும். சர்வதேச அளவில் அதிக கடன் வாங்கும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. நமது கடன் சுமைகளைக் குறைக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால் கடன்களை விரைவாக அடைக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பகிரங்கமாக பாராட்டிய ட்ரம்ப்
கடந்த 2025 ஏப்ரலில் இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இந்திய பொருட்களுக்கு அவர் 25 சதவீத வரியை விதித்தார். பின்னர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரியை அவர் விதித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ரஷ்யாவும் இந்தியாவும் செயலிழந்த பொருளாதாரங்கள். இரு நாடுகளும் சேர்ந்து வீழட்டும்" என்று தெரிவித்தார். தற்போது அவரே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் அபாரமாக உள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கையை அமெரிக்காவும் பின்பற்ற வேண்டும் என்று பகிரங்கமாக பாராட்டு தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
ராகுல் மீது பாஜக விமர்சனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், இந்திய பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஆஷிஷ் சூட் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் பொருளாதார வலிமையை உலகமே அங்கீகரிக்கிறது. ஆனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த உண்மை புரியவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த விவகாரங்களில் ராகுல் காந்தி கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.