வாஷிங்டன்: ஈரான் உடனான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்.28-ம் தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் இடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்கத் தரப்பில் விதிக்கப்பட்ட சில நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை. குறிப்பாக, யுரேனியத்தை செறி
வூட்டும் திட்டத்தை (அணு ஆயுதம்) கைவிட ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
மேலும், ‘ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இந்த ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு, எண்ணெய் கப்பல்களுக்கு சுங்கவரி விதிப்போம்’ என்றும் ஈரான் அறுதி யிட்டு கூறியது. அதேபோல, அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த 3 விவகாரங்களால் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகின.
இஸ்லாமாபாத்தில் 2-ம் சுற்று பேச்சுவார்த்தை 22-ம் தேதி (நேற்று) நடைபெறக்கூடும். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இதில் பங்கேற்பார் என்று தகவல் வெளியான நிலையில், அவரது பாகிஸ்தான் பயணத்தை வெள்ளை மாளிகை நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே, அமெரிக்கா - ஈரான் இடையிலான 2 வார போர் நிறுத்தம் நேற்று முடிவடைய இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை எடுப்பதாக அவர் தனது ட்ரூத் வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஈரான் தரப்பில் எந்த கோரிக்கையும் விடப்படாத நிலையில், ட்ரம்ப் தானாக முன்வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருப்பினும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வுக்கு ஈரான் வரும் வரை அந்நாட்டு துறைமுகங்கள், கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர் கூறும்போது, ‘‘ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு போலியானது. இது திடீர் தாக்குதலுக்கு அவகாசம் பெறுவதற்கான தந்திரம்’’ என்றார். இதற்கிடையே, ஈரான் அரசுக்காக ஆயுதங்கள், உதிரிபாகங்களை கொள்முதல் செய்து, அவற்றை கொண்டு செல்லும் நெட்வொர்க்கை குறிவைத்து, ஈரானுடன் தொடர்புடைய 14 தனிநபர்கள், நிறுவனங்கள், விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் இந்த நடவடிக்கையை அறிவித்தது. இந்த தடையின்கீழ் வருபவர்கள் ஈரான், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.