அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ரஷ்யாவில் இருந்து டீசல் வாங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 9-ம் தேதி தெரிவித்திருந்தார். அதை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அரசியல் கட்சி பிரபலங்கள் விமர்சித்திருந்தனர். இந்த சூழலில் ரஷ்யாவில் இருந்து டீசல் வாங்குவது ஏன்? என்பது குறித்து ட்ரம்ப் விளக்கம் கொடுத்துள்ளார்.
சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவுக்கு உடனடியாக ரஷ்யா விநியோகிக்கும் என்று 9-ம் தேதி அறிவிப்பில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நவம்பரில் 5 லட்சம் மெட்ரிக் டன் டீசல் மற்றும் டிசம்பரில் 1 லட்சம் மெட்ரிக் டன் டீசலும் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கான தற்காலிக வணிகத்துக்கான உரிமத்தை அமெரிக்க கருவூலம் ஏப்ரல் 2027 வரை வழங்கியுள்ளது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை காரணம் காட்டி ரஷ்யாவில் இருந்து எரிபொருள் வாங்கும் உலக நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்தார் ட்ரம்ப். இந்த சூழலில் மேற்காசிய போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா டீசல் வாங்கும் முடிவை அறிவித்திருந்தார். ‘சர்வதேச நாடுகளின் சந்தைகளுக்கு டீசலை விநியோகம் செய்ய ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது’ என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்ப் விளக்கம்
ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா டீசல் வாங்கும் முடிவுக்கு விமர்சனம் எழுந்த நிலையில் ட்ரம்ப் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
“ரஷ்யா உடனான டீசல் வாங்கும் ஒப்பந்தம் உலக சந்தைக்கானது. ஏனெனில், அதிக விலை காரணமாக உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உலகத்துக்கு அதை விநியோகிக்க உள்ளது” என்று செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டது. இந்தச் சூழலில் ரஷ்யாவில் இருந்து டீசலை இறக்குமதி செய்கிறது அமெரிக்கா.
ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிக்கும் ‘லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026’-க்கு கடந்த மாதம் (செப்டம்பர்) அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
இந்தச் சட்டம் மூலம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொள்முதல் செய்யும் முக்கிய நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் பெற்றுள்ளார். இதன் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு வரி விதிப்பது, வரி விதிப்பு விகிதம், விதிகளை தளர்த்தி வரி விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றை ட்ரம்ப் தீர்மானிக்க முடியும் என தகவல்.
இந்தச் சட்டம் அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க வல்லுநர்கள் தகவல் தெரிவித்தனர். அதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், எரிபொருள் கொள்முதல் தடை சட்டத்தை இயற்றிய அமெரிக்காவே இப்போது ரஷ்யாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்கிறது. இது என்ன நியாயம் என்று ஒவ்வொரு சாமானியரும் கேள்வி கேட்கும் சூழல் எழுந்துள்ளது.
கடந்த காலங்களிலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரியை ட்ரம்ப் தலைமையிலான அரசு அமல் செய்தது. இந்தியாவுக்கு வணிக ரீதியாக அழுத்தம் கொடுத்ததும் உண்டு.
‘உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுகிறது. அதை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது’ என அமெரிக்கா தெரிவித்து வந்தது. தற்போது உலக அளவிலான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளாக சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன.