உலகம்

இந்திய பிரதமராக நீண்ட காலம் பணியாற்றி சாதனை: மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து

வேட்டையன்

புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் பணியாற்றி இந்த சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு, 4,398 நாட்கள் பணியாற்றியது சாதனையாக இருந்தது. இந்த சூழலில் ட்ரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ள எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். அவர் மிகச்சிறந்த பிரதமர்! அவர் வலிமையான, ஆரோக்கியமான மற்றும் ஞானம் கொண்டவர். அவர் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றுவார்” என்று ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இச்சாதனை நமது தேசத்தின் சரித்திரத்தில் பெரும் மைல்கல் என்று கூறியுள்ளார். இது வளர்ச்சியடைந்த பாரதத்தின் நீண்ட நெடிய பயணத்தின் முக்கிய அடையாளம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது மக்கள் சேவையாற்றும் மக்களின் தலைவருக்கு நாட்டு மக்கள் அளித்துள்ள மகுடம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் நாடு மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது என்றும் அந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நலனை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பெரும் பங்காற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் வளர்ச்சியின் பயன்களைப் பெறாமலிருந்த விளிம்புநிலை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் நேரடியாக கிடைக்க வகை செய்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேலும் பல ஆண்டுகள் வெற்றியுடன் திகழும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் முதன்மை நாடாக இந்திய தலைமையேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT