உலகம்

ஈரானின் மிக உயரமான பாலம் அழிக்கப்பட்டது: ட்ரம்ப்

மேற்கு ஆசியாவிலேயே மிக உயரமானது!

வெற்றி மயிலோன்

வாஷிங்டன்: “ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம்,” என்று மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், தெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராஜ் நகரில் அமைந்துள்ள பி1 ‘B1’ பாலத்திலிருந்து புகை எழுவதைக்காட்டும் காட்சிகளை ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

கூடவே, 5 வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், மேலும் பல அழிவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

          

பி1 பாலம் அமைந்துள்ள அல்போர்ஸ் மாகாணத்தின் துணை ஆளுநரான கோத்ரத்துல்லா செய்ஃப், இந்தத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 95 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியும், 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், "ஈரானின் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது; இனி அது ஒருபோதும் பயன்பாட்டிற்கு வராது. இன்னும் பல அழிவுகள் நிகழவிருக்கின்றன. காலம் கடந்துபோவதற்கு முன்னர், ஒரு சிறந்த நாடாக உருவெடுக்கும் வாய்ப்புள்ள இந்த நாட்டில் மிச்சம் ஏதுமில்லாமல் அழிந்துபோவதற்கு முன்னர், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட இதுவே சரியான தருணமாகும்" என்று ட்ரம்ப் கூறினார்.

இந்தச் சூழலில் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘முற்றுப்பெறாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது. இது, நிலைகுலைந்துபோன ஒரு எதிரியின் தோல்வியையும், தார்மிக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

பி1 பாலம் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவசர மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்த வேளையிலேயே, இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி கூறியது.

கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ள ‘B1’ பாலம், 447 அடி உயரமுள்ள தூணைக் கொண்டுள்ளதாகவும், மேற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் இதுவே என்றும் 'ஃபார்ஸ்' உள்ளிட்ட ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SCROLL FOR NEXT