உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கான இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஈரான் அரசு ஆதரவாளர்கள்

 
உலகம்

‘இந்தமுறை குண்டு இலக்கை தவறவிடாது’ - ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை!

மோகன் கணபதி

தெஹ்ரான்: கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் டொனால்டு ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பிய படத்துடன், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என எழுதப்பட்ட வாசகத்துடன் ஈரானில் நடைபெற்ற ஊர்வலம் குறித்த செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, டொனால்டு ட்ரம்ப்பக்கான ஈரானின் நேரடி எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், போராட்டக்காரர்கள் தரப்பில் 2,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் உடல்களின் இறுதி ஊர்வலம் தெஹ்ரானில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புகைப்படங்களை ஏந்தியவாறு பங்கேற்றனர். மேலும் பலர், அமெரிக்காவுக்கு மரணம் என அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இதில் பங்கேற்ற ஒரு நபர், கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் டொனால்டு ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்த புகைப்படத்தை ஏந்தியவாறு பங்கேற்றார். அந்த புகைப்படத்தில், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என பாரசீக மொழியில் எழுதப்பட்ட வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இந்த வீடியோ, அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியான இஸ்லாமிய குடியரசு ஈரான் செய்தி நெட்வொர்க் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது, டொனால்டு ட்ரம்ப்புக்கான ஈரானின் நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களின் பின்னணியில் ஈரான் அரசு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வெளிநாடுகளில் நிகழ்ந்த பல்வேறு கொலைச் சதித்திட்டங்களுடனும் ஈரான் அரசு இதற்கு முன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அவை, பெரும்பாலும் ஈரானிய அதிருப்தியாளர்களை இலக்காகக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT