லண்டன்: “ஈரானில் நடந்து வருவது நமது போர் அல்ல; அது நமது தேசிய நலனுக்கு உகந்தது அல்ல என்பதால் பிரிட்டன் இதில் ஈடுபடாது. இந்தப் போர் நமது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும். அதே நேரத்தில், இந்தப் புயல் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்,” என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
இதுகுறித்துப் பேசிய கெய்ர் ஸ்டார்மர், “இது நமது போர் அல்ல. அதேபோல, மத்திய கிழக்கில் நடக்கும் இந்தப் போர் நமது தேசிய நலனுக்கு உகந்தது அல்ல என்பதால் பிரிட்டன் இதில் ஈடுபடாது. பிரிட்டனில் வாழ்க்கைச் செலவைக் குறைக்க நாம் செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள வழி, மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கும், எரிசக்திக்கு மிகவும் இன்றியமையாத பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதே ஆகும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ராஜதந்திர முயற்சிகளை வரவேற்கிறோம். அதற்காக, எங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ராஜதந்திர வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த வாரத்தின் பிற்பகுதியில், வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர் முதன்முறையாக மத்திய கிழக்கில் போரில் ஈடுபடும் நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்பதை இன்று நான் அறிவிக்கிறேன்.
அந்தக் கூட்டத்தில், கப்பல் போக்குவரத்தின் சீரான நிலைமையை மீட்டெடுக்கவும், சிக்கியுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் தேவையான அனைத்து ராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்வோம்.
வளைகுடா முழுவதும் கடல்சார் பாதுகாப்பிற்காக ஒன்றாகச் செயல்படும் நமது நோக்கத்திற்காக பிரிட்டன் இப்போது 35 நாடுகளை ஒன்றிணைத்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இன்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். பட்ஜெட்டில் நாம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, இன்று நமது எரிபொருள் கட்டணங்கள் குறைக்கப்படும்.ஈரானில் என்ன நடந்தாலும், இந்த விலை இப்போது ஜூலை வரை நிலையாக இருக்கும்” என்றார்.
முன்னதாக, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “வரவிருக்கும் மாதங்கள் எளிதாக இருக்காது. அதை நான் வெளிப்படையாகக் கூற விரும்புகிறேன். இந்தப் போர் ஏற்படுத்தி வரும் அழுத்தங்களை முற்றிலுமாக நீக்கிவிடுவோம் என்று எந்த அரசாங்கமும் உறுதியளிக்க முடியாது.
இதன் மோசமான விளைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று என்னால் உறுதியளிக்க முடியும். இவை நிச்சயமற்ற காலங்கள், ஆனால் இதில் நான் முற்றிலும் உறுதியாக இருக்கிறேன். இந்த உலகளாவிய சவால்களை நாம் எப்போதும் போல, ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டு கையாள்வோம்,” என்று அவர் கூறினார்.