வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தானியங்கி பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்தக் கோரி அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின்படி, 1868-ம் ஆண்டு முதல் அந்நாட்டு மண்ணில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி அமைக்கும் நோக்கில், அதிபர் டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார்.
தற்போதைய குடியுரிமை கொள்கையை ஒரு அவமானம் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார். அதேபோல், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இது உலகிலேயே மிகவும் முட்டாள் தனமான குடியேற்றக் கொள்கை என்று முன்பு குறிப்பிட்டிருந்தார். இதற்கு சட்ட ரீதியாகப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு வந்தது.
அப்போது, 14-வது திருத்தத்தின் நீண்டகால விளக்கம் தவறானது என்று ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதிட்டது. அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்காவின் அதிகார வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்றும், எனவே அவர்களுக்குத் தானாகவே குடியுரிமை பெற உரிமை இல்லை என்றும் டொனால்டு ட்ரம்ப் தரப்பு வாதிட்டது.
ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், 6-3 என்ற நீதிபதிகளின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில், அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் பிறப்புரிமை குடியுரிமை வழங்குவதை உறுதி செய்து தீர்ப்பளித்தது.