டொனால்ட் ட்ரம்ப்
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது 100% கூடுதல் வரி விதிக்கக் கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியுள்ளது. இந்நிலையில், ஈரான் மீதும் வரி விதிப்பதற்கான விரிவான அதிகாரங்களை தனக்கு வழங்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய வளங்கள் ஆகும்.
எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அதிகமான வரியை விதித்து வருகிறார். சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.
அந்த வகையில், ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா, ஸ்லோவேகியா, ஹங்கேரி, அசர்பைஜான் ஆகிய நாடுகள் மீது 100% கூடுதல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா, அமெரிக்க செனட் சபை வாக்கெடுப்பில் நேற்று முன்தினம் நிறைவேறியது.
இந்த சூழலில், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், ஈரான் மீது வரி விதிப்பதற்கான விரிவான அதிகாரத்தை தனக்கு வழங்கும் வகையில் இந்த மசோதாவை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், இது அவசியமாக இருக்காது. ஆனால் தேவைப்பட்டால், வெறும் பொருளாதாரத் தடைகளாக மட்டுமல்லாமல், ஈரான் மீதும் வரி விதிக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கும் அம்சத்தை அவர்கள் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.