லண்டன் நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமை நீதிபதி சூர்ய காந்த்

 
உலகம்

‘கண்ணியற்ற நடத்தை...’ - லண்டனில் தலைமை நீதிபதி நிகழ்வு சலசலப்புக்கு இந்திய தூதரகம் கண்டனம்

மோகன் கணபதி

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்ற உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜூன் 4 அன்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றியதை அடுத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பார்வையாளர் ஒருவர் இடையூறு விளைவிக்க முயன்றார்.

இத்தகைய கண்ணியற்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது விவாதங்களில் மரியாதையுடன் நடந்து கொள்வதற்கு முரணானது இது. கருத்து வேறுபாடுகள் ஜனநாயக சமூகத்தின் இயல்பான ஒரு பகுதி என்றாலும், அவை நாகரிகமானதாகவும் மரியாதைக்குரியதாகவும் இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜூன் 4-ம் தேதி லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்பெக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையை நிறைவு செய்த பிறகு கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பார்வையாளர் ஒருவர், வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என கூறியது பற்றி சூரியகாந்த்திடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், இது தலைப்புக்கு பொருத்தமற்ற கேள்வி என்பதால் இந்த கேள்வியை ஏற்க முடியாது என கூறினார். இதனால், நிகழ்ச்சியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சில பார்வையாளர்கள் எழுந்து நின்று சைகை செய்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அமைதி காக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் பார்வையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்து நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT