பாங்காக்: தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள 40-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
தலைநகர் பாங்காக்கில் கடந்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களில் சுமார் 320 மில்லிமீட்டர் மழை பதிவானதாகவும், இது பொதுவாக செப்டம்பர் மாதம் முழுவதும் பாங்காக் பெறும் மழை அளவுக்கு நெருக்கமானது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தொடர் கனமழையால் நகரம் முழுவதும் இடுப்பளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது.
பாங்காக் மாநகர நிர்வாகத்தின் தகவலின்படி, இதுவரை 5,901 பேர் 234 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும், 80,000-க்கும் அதிகமானோர் வெள்ளம் காரணமாக இன்னும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் உன்சித் சம்புந்தரத் தெரிவித்துள்ளார்.